கல்லெறிந்து தாக்குதல் நடத்தி, இருவரைக் காயப்படுத்திய, யாசகர்


(க.கிஷாந்தன்)  
அட்டன் நகரில் அமைதியற்ற முறையில் செயற்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தி, இருவரைக் காயப்படுத்திய, யாசகர் ஒருவர் அட்டன் பொலிஸாரால் 02.10.2019 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரது தாக்குதலில் பாடசாலை மாணவியொருவரும் காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சந்தேகிக்கப்படும் குறித்த யாசகரை பிடிப்பதற்கு பிரதேசவாசிகள் முயன்ற போது, அவர் அட்டன் ஜூம்மா பள்ளிவாசலுக்குள் சென்று மறைந்துக்கொண்டதாக தெரிவிககப்படுகின்றதுஇதனையடுத்து அட்டன் பொலிஸார் யாசகரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.
இதேவேளை, அட்டன் நகரில் சில இளைஞர்கள் குறித்த யாசகரை கேலிக்குட்படுத்தும் வகையில் நடத்துவதால், அவ்வாறு நடத்தும் இளைஞர்களை குறித்த யாசகர் கற்களால் தாக்குவாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைதியற்ற முறையில் நடந்துக்கொண்ட குறித்த யாசகரை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக, அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.