செளரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக தேர்வு


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக முன்னாள் இந்திய கேப்டனான செளரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிசிசிஐ தலைவரான ராஜீவ் சுக்லா இது குறித்துக் கூறுகையில், செளரவ் கங்குலியை பிசிசிஐ தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதிகாரப்பூர்வமான இறுதி அறிவிப்பு 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
பிசிசிஐ தலைவர் பதவிக்கு விண்ணப்பம் தாக்கல் செய்த செளரவ் கங்குலி, ''இந்திய அணியின் முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் ஒரு பதவியிலிருந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவது மிகவும் திருப்திகரமாக இருக்கும். அடுத்த சில மாதங்களில், இந்திய கிரிக்கெட்டில் எல்லாவற்றையும் சரிசெய்து இயல்பு நிலைக்குக் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று தெரிவித்தார்.
முன்னதாக பிரிஜேஷ் பட்டேல், சௌரவ் கங்குலி ஆகிய இருவரது பெயர்களையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் இரண்டு வெவ்வேறு பிரிவினர் ஆதரிக்கின்றனர் என்றும், கங்குலிக்கு முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் ஆதரவு தெரிவிப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன.
47 வயதாகும் கங்குலி தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பதவி வகிக்கிறார்.