ஒற்றுமையே எஞ்சியுள்ள இறுதி ஆயுதம்


(க.கிஷாந்தன்)
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும் என்றால் பொதுவான வேலைத்திட்டம் ஒன்று அவசியம். எனவே கட்சி அரசியலை விடுத்து அனைத்து தமிழ் கட்சிகளும் நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் ஒரு ஒன்றியமாக செயற்பட முன்வரவேணடும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
07.11.2019 அன்று மதியம் அட்டனில் இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றியமாக செயற்பட வேண்டும் என இந்தியாவினுடைய விருப்பும் அமைகின்றதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தங்களிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என்று ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டால் தென்னிலங்கையில் கோட்டாபாய ராஜபக்சவிற்கு ஆதரவு அதிகரித்து விடும் என்பதால் இறுதி நேரத்தில் தனது நிலைப்பாட்டை அறிவிக்க கூட்டமைப்பு உத்தேசித்திருந்தது.
எனினும் நாளுக்கு நாள் தென்னிலங்கையில் கோட்டாபாய ராஜபக்சவிற்கான ஆதரவு அதிகரித்து வருவதனால் தமிழர்களுடைய ஏகோபித்த ஆதரவினை அறிவிப்பதற்காக தான் கூட்டமைப்பு முன்கூட்டியே தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் 25 பேர் கொண்ட தலைமை குழு கூட்டம் நடைபெற்ற பொழுது 15 பேர் பங்கு பற்றியுள்ளனர். அதில் 11 பேர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளித்துள்ளனர். மீதிவுள்ள நான்கு பேர் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவு வழங்கு முடியாது என தெரிவித்து எதிராக வாக்களித்துள்ளனர்.
பெரும்பான்மை சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இதன் மூலம் ஒரு உளவியல் தாக்கத்தை தென்னிலங்கையிலேயே செலுத்துவதற்கு முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நம்புகின்றது.
ஆனால் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட போவதில்லை.
போர் முடிந்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. மகிந்த ராஜபக்ச தரப்பு 2015ம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவில்லை.
இந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு வந்த நல்லாட்சி அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்படவில்லை.
ஆனால் இடைக்கால நிவாரணத்தை மனம் இறங்கி கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம் இல்லாவிட்டால், சர்வதேச நியமங்கள் அடிப்படையில் தான் காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.