ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்?


சென்னை

ரஜினியும், கமலும் சினிமாவில் அறிமுகமானது முதலே நண்பர்கள். அரசியலிலும் அப்படி இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. கமல் பெற்ற வாக்கு சதவீதம், ரஜினிக்கு இருக்கும் நிர்வாகிகள் பலம், கிராமப்புற செல்வாக்கு இவற்றை எல்லாம் கணக்கு போட்டு பார்த்த இருவருக்கும் பொதுவான நண்பர்கள், இருவரும் இணைந்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்கலாம் என்ற ரீதியில் ஆலோசனை கூறி வருகின்றனர்.


உள்ளாட்சி தேர்தலில் ரஜினி ஆதரவுடன் கமல் களம் இறங்க தயாராகி விட்டார் என்கிறார்கள்.  கமலுக்கு ஆதரவு தெரிவிப்பது மூலம் தனது மன்றத்துக்கு இருக்கும் மக்கள் ஆதரவை தெரிந்து கொள்ள ரஜினிக்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.

இதை ரஜினி- கமல் கூட்டணிக்கான தொடக்கமாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள். கமலுக்கு தேர்தலை சந்தித்த அனுபவம் இருக்கிறது. ரஜினிக்கு கிராமப்புறங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. இருவரும் இணைவது என்பது இருவருக்குமே நன்மை தரும் ஒன்றாக இருக்கும்.

அந்த வகையில்  தமிழக மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்று நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  கூறியுள்ளனர். இருவருமே தமிழக மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்று தனித்தனியாக பேட்டி அளித்துள்ளனர்.

நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிரணியின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீப்ரியாவிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;-

மக்களுக்கு அவசியம் என்றால் இது நடந்தே தீரும். கண்டிப்பாக இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு மட்டும் சேவை செய்ய வேண்டும். இவருக்கு என்ன தெரியும்? அவருக்கு என்ன தெரியும்?’ என அநாவசியமான விமர்சனங்களை வைக்கக்கூடாது. அவர்களும் பிறக்கும்போதே மேடையில் பேசிக்கொண்டு பிறக்கவில்லை. எனவே, விமர்சனங்களை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்வதற்கான வாய்ப்பு இது. அப்படிச் செய்யவில்லை என்றால் நிச்சயம் இரண்டு பெரிய சக்திகள் ஒன்று சேரத்தான் செய்யும்.

கட்சி தொடங்கிய ஒரு வருடத்துக்குள்ளேயே நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என அதில் நாங்கள் தெரிந்துகொண்டோம். மக்களும் எங்களைப் புரிந்து கொண்டனர். அதில் தனித்து நின்றதால், வரப்போகும் தேர்தல்களில் கூட்டணி கிடையாது என அர்த்தமில்லை. ஒருமித்தக் கருத்து உடையவர்கள் ஒன்று சேர்வோம் என எங்கள் தலைவர் கூறியிருக்கிறார். இவர்கள் இருவருமே நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும்போது, கண்டிப்பாக ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.

அப்படி இணைந்தால், இருவரில் யார் முதல்வர் வேட்பாளர்? என கேட்க, என்னுடைய அபிப்ராயம் கமல் முதல்வராக வேண்டும் என்பது. அதற்காகத்தான் நான் வேலை செய்வேன். யாருடன் இணைந்து வேலைசெய்ய வேண்டுமென அவர் சொல்கிறாரோ, அவர்களுடன் வேலை செய்வோம் என கூறினார்.