'சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் வெறும் பெட்டி செய்தியல்ல'

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் போராடிவருகின்றனர். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சுப்பைய்யா ஆகிய இரண்டு மாணவர்களும் காவல் துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் மாணவர்கள் கோரிவந்தனர்.
இந்த நிலையில், காவல்துறை வசம் இருந்த மாணவர்கள் காலையில் விடுவிக்கப்பட்டனர். இருந்தபோதும் மாணவர்கள் தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்துவந்தனர்.
டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை சந்தித்தபின் செய்தியாளர்களைப் பேசிய கமல், "இந்த மாணவர்களின் போராட்டம் வெறும் பெட்டிச் செய்தியுடன் அடங்கிவிடக் கூடாது. மாணவர்களை அகதிகளாக முயன்று வருகின்றனர். இந்த மாணவர்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டியது இந்திய மற்றும் தமிழக அரசின் கடமை," என்றார்.
"என்னை நீங்கள் யார் எனக் கேட்காதீர்கள்? நானும் நிரந்தர மாணவன்தான். மாணவர்களின் கேள்விக்குப் பதில் அளியுங்கள்," என்றார் கமல்.
இதையடுத்து பூட்டப்பட்டிருந்த கதவுகளுக்கு வெளியிலிருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் பேசினார் கமல்ஹாசன். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் இங்கே கட்சிக்காரனாக வரவில்லை. இந்தியனாக வந்திருக்கிறேன். மாணவர்களை அரசு அகதிகளாக மாற்றிவைத்திருக்கிறது. சர்வாதிகார நாடகம் ஐரோப்பாவில் நடந்தது. இங்கே அது மீண்டும் நடக்கிறது. என்னுடைய ஆயுதம் நேர்மைதான். அது அவர்களிடம் இல்லை. சட்டங்கள் மக்களுக்குப் பயன்படாவிட்டால், அதனைத் திரும்பப் பெற வேண்டும்" என்று கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டம்: சென்னை பல்கலைக்கழகத்தில் வலுக்கும் போராட்டம்
"நான் தடி ஊன்றி இங்கே வந்திருக்கிறேன். ஜனநாயகமும் இப்போது அப்படித்தான் இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.
டிசம்பர் 23ஆம் தேதியன்று தி.மு.க. நடத்தவிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்குமா எனக் கேட்டபோது, நிச்சயம் பங்கேற்கும் என கமல்ஹாசன் கூறினார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கமல், "பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்படும் உரிமை இலங்கை இந்துவுக்கு ஏன் இல்லை?" எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
கிராமங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து செத்து கொண்டிருக்கும்போது அதைத் தடுக்க வழிசெய்யாமல் மதத்தின் பெயரால் மக்களைப் பிரிப்பது அரசின் சூழ்ச்சி என்றும் பெண்கள் உயிர் பயத்தில் வாழும் நேரத்தில் அதைச் சரிசெய்யாமல், வாக்கு வங்கிக்காக சட்டப்பிழைகளைச் செய்வது அரசு மக்களுக்கு எதிராகத் தொடக்கும் போர் என்றும் கமல்ஹாசன் குற்றம்சாட்டி இருந்தார் கமல்.


Advertisement