பருவநிலை மாற்றம்: காரணமாகும் பணக்கார நாடுகள்


பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முயற்சியில் ''நெருக்கடியான தருணம் வந்துவிட்டது'' என்று சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
''ஒவ்வொரு வருடமும் நாம் பிரச்சனைகளை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறோம்,'' என்று பிரபல இயற்கை ஆர்வலரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான அட்டன்பரோ கூறியுள்ளார்.
''தென்கிழக்கு ஆஸ்திரேலியா நெருப்புக்கு இடையில் இருந்து நான் பேசுகிறேன். ஏன்? ஏனெனில் பூமியின் வெப்ப நிலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது'' என்று அவர் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றம் என்ற தலைப்பில் ஓராண்டு காலத்துக்கான சிறப்பு செய்தித் தொகுப்புகளைத் தொடங்கும் வகையில் இடம் பெற்ற பிபிசி செய்தி நேர்காணலில் டேவிட் அட்டன்பரோவின் இந்தக் கருத்துகள் வெளியாயின.
''ஆஸ்திரேலிய தீ விபத்தால் புவி வெப்பம் அடையாது என்று சிலர் கூறுவது முட்டாள்தனமான கருத்து'' என்று அவர் கூறினார்.
பூமி வெப்பமடைவதன் பின்னணியில் மனிதர்களின் செயல்பாடுதான் உள்ளது என்பதை நாம் ''முழுமையாக அறிந்திருக்கிறோம்'' என்று அவர் கூறினார்.

'நெருக்கடிக்கான தருணம்'

பருவநிலை மாற்ற பிரச்சனையை சமாளிக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பருவநிலை மாற்றத்தை கண்காணிக்கும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகக் கூறும் நிலையில், சர்வதேச பேச்சுவார்த்தைகளின் வேகம் மிகவும் மெதுவாக இருக்கிறது என்பதை அவர் வலியுறுத்திக் காட்டுகிறார்.
அவருடைய சமீபத்திய உரை - கடந்த மாதம் மாட்ரிட் நகரில் ஆற்றிய உரை - ஐ.நா. பொதுச் செயலாளர், பிரிட்டிஷ் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருந்தது என்று கூறப்பட்டது.
முக்கியமான விஷயங்களில் முடிவு எடுக்காமல் தள்ளிப் போடப்படுகிறது என்றும், ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தங்கள் உத்தரவாதத்தை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
''இது விளையாட்டான விஷயமல்ல என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்'' என்று சர் டேவிட் அட்டன்பரோ குறிப்பிட்டுள்ளார்.
''கொஞ்சம் விவாதம், வாக்குவாதம் நடத்திவிட்டு, ஓர் ஒத்த கருத்துடன் பிரிந்து செல்லக் கூடிய விஷயமல்ல'' என்கிறார் அவர்.
''அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனை இது. இதை எப்படி செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரியும். அதுதான் முரண்பாடானது. என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்தும், நாம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறோம்'' என்று அவர் குறிப்பிட்டார்.

அவை என்ன நடவடிக்கைகள்?

எதிர்காலத்தில் மிக அபாயகரமான அளவுக்கு வெப்பநிலை உயர்வதைத் தவிர்ப்பதற்கு என்ன மாதிரியான, சாத்தியமான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றி 2018ல் ஐ.நா. பருவநிலை மாற்ற அறிவியல் குழு பட்டியலிட்டது.
மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் விவசாயம் மூலம் வெளியாகும் பூமியை வெப்பமாக்கும் வாயுக்களை 2030ஆம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
காட்டுத் தீயால் ஆஸ்திரேலியா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பருவநிலை `நெருக்கடி தருணம்' பற்றி சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கை
புவியை வெப்பமடைய வைக்கும் வாயுக்கள் உற்பத்தி குறைவதற்குப் பதிலாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய வாயுவான கரியமில வாயு, மனிதகுல வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்ச நிலையை எட்டியுள்ளது.
''ஒவ்வோர் ஆண்டும் கரியமில வாயு அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது,'' என்று சர் டேவிட் அட்டன்பரோ கூறியுள்ளார்.

இப்போது இது ஏன் முக்கியமானதாக உள்ளது?

பருவநிலை மாற்றத்தின் பேரலையை மாற்றுவதில் முக்கியமான வாய்ப்பை அளிப்பதாக இந்த ஆண்டு அமைந்துள்ளது.
பிரிட்டனில் கிளாஸ்கோ நகரில் COP26 எனப்படும் முக்கியமான ஐ.நா. உச்சி மாநாடு நவம்பர் மாதம் நடைபெறுகிறது.
அதற்கு முன்னதாக தங்களின் கரியமில வாயு உற்பத்தியைக் குறைத்தாக வேண்டிய கடுமையான நெருக்கடி அனைத்து அரசுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
அவர்களுடைய இப்போதைய உறுதிமொழிகள், இலக்கிற்கு அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு உள்ளன.
வாக்குறுதி அளித்தபடி அவை நிறைவேற்றப்படும் என்று வைத்துக் கொண்டாலும் (அதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை), தொழில்மய நிலைக்கு முந்தைய நிலையைவிட, இந்த நூற்றாண்டு இறுதியில் சராசரியாக 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு புவியின் வெப்பம் அதிகரித்திருக்கும்.
ஐ.நா.வின் அரசுகளிடையேயான பருவநிலை மாற்றக் குழுவின் (ஐ.பி.சி.சி.) சமீபத்திய மதிப்பீட்டின்படி, அது ஆபத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
1.5 டிகிரி செல்சியஸ் எனும் அளவைவிட அதிகமாக வெப்பநிலை அதிகரித்தாலே, கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும், வெப்ப அலைகள் வீடும், கடலுக்கடியில் சிப்பிகள் வளம் பாதிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்ந்துவிட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து என்ன நடக்கும்?

இப்போதுள்ள நிலையில் பார்த்தால், வெப்பம் மேலும் உயர்வது தவிர்க்க முடியாதது என்று தெரிகிறது.
''நாம் ஏற்கெனவே மாறிவிட்ட உலகில் வாழ்கிறோம்'' என்று ரீடிங் பல்கலைக்கழக பேராசிரியர் எட் ஹாவ்கின்ஸ் கூறியுள்ளார். புவிவெப்பம் குறித்த இவருடைய கணிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் வெப்ப நிலை சராசரியை விட எவ்வளவு அதிகமாக அல்லது குறைவாக உள்ளது என்பதைக் காட்டுவதற்கு அவர் அடர் நிற பட்டைகளை பயன்படுத்துகிறார். வெப்பம் அதிகரித்திருந்தால் சிவப்பு நிறத்தையும், குளிராக இருந்தால் நீல நிறத்தையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.

நமது பூமி முக்கியம்

டி-சர்ட்கள், தலையில் போடும் துணிகளிலும், ஜெர்மனியில் டிராம்களிலும்கூட இந்த வடிவமைப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்தத் தருணத்தில், அதிகபட்ச அளவு எச்சரிக்கையை குறிப்பிட பேராசிரியர் ஹாவ்கின்ஸ் அடர் சிவப்பு பட்டைகளைப் பயன்படுத்தி உள்ளார். ஆனால் துருவக் கடல் போன்ற பகுதிகளில் ஆண்டுக்கு ஆண்டு அதிகபட்ச உயர்வைக் காண முடிகிறது.
பருவநிலை `நெருக்கடி தருணம்' பற்றி சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
புதிய நிறங்களைத் தேட வேண்டிய அளவுக்கு, பருவநிலை மாற்றத்தின் தன்மைகள் உள்ளன.
எதிர்கால வெப்ப நிலை உயர்வைப் பற்றி விளக்கும்போது, ''அடர் இளஞ்சிவப்பு அல்லது கருப்பு நிறத்தை கூட பயன்படுத்தலாமா என்று நான் யோசித்து வருகிறேன்'' என்று அவர் என்னிடம் கூறினார்.
''பருவநிலை மாற்றம் என்பது எப்போதோ நடக்கப் போவது என்று மக்கள் நினைக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் புதிய வெப்பநிலை அதிகரிப்பு பதிவுகள், புதிய ஆபத்துகளை நாங்கள் பார்த்து வருகிறோம்,'' என்று அவர் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் செயல் திட்டத்தில் இந்த ஆண்டில் வேறு என்ன இருக்கிறது?

இயற்கையான உலகம், அதற்கு ஊறு விளைவிப்பதை நம்மால் நிறுத்த முடியுமா என பார்க்க வேண்டியுள்ளது.
பெரும்பான்மையான அரசியல் கவனம் பருவநிலை மாற்றத்தின் மீது இருக்கும் என்ற நிலையில், சுற்றுச்சூழல் மண்டலத்தை பாதிக்கும் வகையிலான மனிதர்களின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதற்கு வழிவகைகளைக் காண வேண்டியது முக்கியமானதாக இருக்கும்.
இது ஏன் முக்கியம் என்பதற்கு சர் டேவிட் உறுதியான விளக்கத்தை முன்வைக்கிறார். ''நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசத்துக்கும் மூச்சுக் காற்றுக்கும், நாம் சாப்பிடும் ஒவ்வொரு கை உணவுக்கும் இயற்கை உலகைத்தான் நாம் சார்ந்திருக்கிறோம்'' என்று அவர் கூறுகிறார். இயற்கையை எப்படி பாதுகாப்பது என்பது தொடர்பான முக்கியமான மாநாட்டுக்காக சீனாவில் குன்மிங் நகரில் உலகத் தலைவர்கள் கூடவுள்ளனர்.
பருவநிலை `நெருக்கடி தருணம்' பற்றி சர் டேவிட் அட்டன்பரோ எச்சரிக்கைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionநார்தம் ஒயிட் காண்டாமிருகங்கள்
நார்தம் ஒயிட் காண்டாமிருகங்கள் (படத்தில் காண்பது) உலகில் இப்போது இரண்டு மட்டுமே உள்ளன. ''நடைமுறையில்'' அந்த இனம் அழிந்துவிட்ட நிலைக்கு வந்துவிட்டது.
வரக்கூடிய தசாப்தங்களில் பத்து லட்சம் விலங்கு, பூச்சி மற்றும் தாவர இனங்கள் அழிவை எதிர்நோக்கியுள்ளன என்று கடந்த ஆண்டு வெளியான அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகரங்களின் வளர்ச்சி, விவசாயத்துக்காக வனங்கள் அழிப்பு, உணவுக்காக மீன் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் முக்கால் பகுதி நிலம் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
முக்கியமான உயிரினங்களை நாம் குறைத்து மதிப்பிடுவதால், ``நமது பாதுகாப்பு வளையத்தை நாமே அழித்துக் கொள்கிறோம், நாம் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழலை நாமே அழித்துக் கொள்கிறோம்'' என்று அந்த ஆய்வுக் குழுவில் பங்கேற்றவர்களில் ஒருவரான லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியக பேராசிரியர் ஆண்டி பர்விஸ் கூறியுள்ளார்.
நவீன பேஷனால் உருவான நெருக்கடியால் பதப்படுத்திய உணவில் பாமாயில் பயன்பாடு தொடங்கி, ஷாம்பு பயன்பாடு வரையில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேறிய பல நாடுகளில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அவசியத்தை புரிந்து கொண்டுள்ளனர் என்றாலும், ''சுற்றுச்சூழல் பாதிப்பை கையாள முடியாத ஏழை நாடுகளுக்கு இந்த ஆபத்துகளை நாம் ஏற்றுமதி செய்கிறோம். அவை நமக்கு விற்கும் பொருள்களை உற்பத்தி செய்வதில் அந்த ஆபத்துகளை எதிர்கொள்கின்றன,'' என்று பேராசிரியர் பர்விஸ் கூறுகிறார்.
குன்மிங்கில் அக்டோபர் மாதம் கூட்டம் நடைபெறுகிறது. கிளாஸ்கோவில் ஐ.நா. பருவநிலை உச்சி மாநாடு நடைபெறுவதற்கு ஒரு மாதம் முன்னதாக இது நடைபெறுகிறது. அந்த வகையில் பூமியுடன் நமது உறவுகளை ஆய்வு செய்வதில் முக்கியமான ஆண்டாக இது இருக்கப் போகிறது.