அமேசான் காடுகள், பெண்களுக்கு எதிரான கருத்துகள் கூறிய பிரேசில் அதிபர்


இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ இந்தியா வந்துள்ளார்.
பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டின் போது பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா வர அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்க பொல்சனாரூ இந்தியா வருகிறார்.

'யார் இந்த பொல்சனாரூ?'

தீவிர வலதுசாரி கருத்துடையவர் சயீர் பொல்சனாரூ. 2018 தேர்தல் சமயத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துகளை அவர் தெரிவித்து வந்தார்.
"ஆணுக்குத் தரும் அதே சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வேலைக்கு எடுக்கமாட்டேன். ஏனெனில் பெண் கருத்தரிப்பாள்" என 2016ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானா ஜிம்மெனெஸ்-சுடன் பங்கேற்ற நேர்க்காணலில் தெரிவித்தார் பொல்சனாரூ.
ஆனால், பிறகு தாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், வேலை தருகிறவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பதை தாம் வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.
இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மரியா டோ ரொசாரியோ-வை பார்த்து "உன்னை வன்புணர்வு செய்யமாட்டேன். ஏனென்றால் நீ அதற்குத் தகுதியானவர் இல்லை" என்று கூறியவர் பொல்சனாரூ.
மோடி MODIபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
கருப்பின பிரேசில் மக்களுக்குத் தரப்பட்டுள்ள இடஒதுக்கீடு போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்றும், பெண்களை கொலை செய்கிறவர்களுக்கு கூடுதல் தண்டனை தர வழிசெய்யும் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும் கடந்த காலங்களில் பேசி இருக்கிறார்.
1964-1985 காலத்தில் நடந்த பிரேசிலின் ராணுவ சர்வாதிகாரம் செய்த தவறு, இடதுசாரி செயற்பாட்டாளர்களை கொல்லாமல் அவர்களைக் கொடுமைப்படுத்தியதுதான் என்றும் அவர் கூறியுள்ளார். மனித உரிமை அமைப்புகளுக்கு வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படும் என்று கூறியுள்ள அவர் "மனித உரிமைகள் பிரேசிலுக்கு கேடு" என்று கூறியுள்ளார்.
இவருக்கு எதிராக பிரேசிலில் பிரபல பெண்கள் ஒன்று சேர்ந்து #NotHim பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
பிரேசில் தேர்தல் பிரசார சமயத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 6-ம் தேதி ஓர் அரசியல் நிகழ்வின்போது மன நிலை பாதிக்கப்பட்ட நபரால் கத்தியால் குத்தப்பட்டார் பொல்சனாரூ.

'அமேசான் காடு'

வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரித்தது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.
2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை கூறியது.
இந்தியா வருகை தர இருக்கும் பிரேசில் அதிபர் குறித்த முக்கிய தகவல்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அமேசான் மழைக்காடுகளை காப்பதில் சரியாக பொல்சனாரூ செயல்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டார்.
"அமேசான் ஒன்றும் தீக்கிரையாக்கப்படவில்லை. சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம்" என்று அப்போது பொல்சனாரூ பேசினார்.
செப்டம்பர் மாதம் ஐ.நாவில் பேசிய பொல்சனாரூ, "அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை.அமேசான் குறித்து உலக சமூகத்திடம் தவறான புரிதல் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் குதர்க்க வாதம் செய்கிறார்கள். அமேசான் மனிதக்குலத்தின் பொக்கிஷம் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. அது போல அமேசான் காடு இவ்வுலகத்தின் நுரையீரல் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது" என்றார்.