#SLT மீது சைபர் தாக்குதல்


இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தின் தரவு கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதல் சில தினங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டுள்ளதை ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் பிபிசி தமிழுக்கு உறுதிப்படுத்தினார்.

சைபர் தாக்குதல் காரணமாக டெலிகாம் நிறுவனத்தின் சில நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, தாக்குதல் நடத்த முயற்சித்தவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இன்றி தமது சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனம் தெரிவிக்கின்றது.

வாடிக்கையாளர்களின் தகவல்களுக்கு எந்தவித பிரச்சனையும் கிடையாது என கூறியுள்ள அந்த நிறுவனம், தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க தமது கணினி வல்லுநர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையிலுள்ள பிரதான நிறுவனமொன்றின் கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளம் நாகரத்னம் தெரிவித்தார்.

Banner

ஸ்ரீலங்கா டெலிகாம் நிறுவனம் இதுவரை தமக்கு உத்தியோகப்பூர்வமாக எந்தவித முறைப்பாடுகளையும் தமக்கு செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எனினும், தாம் அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவாக எச்சரிக்கை தகவலொன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறினார்.

'சோடினோகிபி 'ரிவில்" என்ற ரான்சம்வேர் மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் குழு தெரிவிக்கின்றது.

இந்த வைரஸானது, கணினி கட்டமைப்பிலுள்ள தரவுகளின் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவற்றை பயன்படுத்த முடியாத நிலைக்கு கொண்டு செல்லும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு முடக்கப்படும் கணினி கட்டமைப்பை மீள வழமைக்கு கொண்டு வருவதற்காக பணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

பிட்காயின் மூலமாகவே இந்த பணத்தை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சைபர் தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இலங்கையில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ரான்சம்வேர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக அளவில் முதல் முதலாக பாதிப்பை ஏற்படுத்தியது.

மின்னஞ்சல் மூலமாகவோ, இணையதள முகவரிகள் மூலமாகவோ, இணையதள இணைப்புக்கள் மூலமாகவோ அல்லது தீங்கு விளைவிக்கும் இணையதளங்களுக்குள் பிரவேசிப்பதன் மூலமாவோ பொதுவாக ரான்சம்வேர் தாக்குதல் நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'சோடினோகிபி ரிவில்" என்ற ரான்சம்வேர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சட்ட நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் குழு குறிப்பிடுகின்றது.

இந்த தாக்கத்திலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?

அடையாளம் தெரியாத முகவரிகளிலிருந்து கிடைக்கப் பெறும் மின்னஞ்சல்களுக்குள் பிரவேசிப்பது, மின்னஞ்சல் மூலம் வரும் இணைப்புகளுக்குள் பிரவேசிப்பது மற்றும் தீங்கு விளைவிக்கும் இணையதளங்களுக்குள் பிரவேசிப்பது ஆகியவற்றை கூடுமானவரை தவிர்த்துக்கொள்வது சிறந்தது என இலங்கை கணினி அவசர தயார் குழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தீனதயாளம் நாகரத்னம் தெரிவித்தார்.

இவ்வாறான ரான்சம்வேர் ஒன்று தாக்கும் பட்சத்தில், உடனடியாக கணினி கட்டமைப்பிலிருந்து குறித்த இணையத்தை துண்டித்தல் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.

நிறுவனமானாலும் அல்லது தனிநபரானாலும் தமது அனைத்து தகவல்கள் மற்றும் தரவுகளை இணைய வசதியுடன் தொடர்புப்படாத வேறொரு இடத்தில் பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைத்திருத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனவும் அவர் கூறுகின்றார்.

சைபர் தாக்குதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான தாக்குதல்களுக்கு பணத்தை செலுத்துவது சிறந்த நடைமுறை கிடையாது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இலங்கையிலுள்ள பிரபல இணையதளங்கள் மீது மே மாதம் 18ஆம் தேதி சைபர் தாக்குதலொன்று நடத்தப்பட்டிருந்தது.

இந்த தாக்குதல் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ஆம் தேதி நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த முறையில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளை தனியார் மற்றும் அரச நிறுவனங்களுடன் இணைந்து, இலங்கை கணினி அவசர தயார் குழு செயற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இலங்கையின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது நடத்தப்பட்டுள்ள சைபர் தாக்குதலுக்கும், மே 18ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் இடையில் தொடர்புள்ளதா என இலங்கை கணினி அவசர தயார் குழுவிடம் வினவினோம்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அவ்வாறான எந்தவொரு தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை என அந்த குழு தெரிவிக்கின்றது.