ஜூன் 21 நெருப்பு வளையம் எங்கு, எப்போது, எப்படி தெரியும்?


ஜூன் 21-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் உண்டாக காரணம். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.

ஞாயிறு அன்று நிகழும் சூரிய கிரகணம் வளைவு சூரிய கிரகணம் (annular solar eclipse) என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் நடுப்பகுதியை மட்டுமே மறைக்கும். அதனால் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றும்.

இதன்போது சாதாரண கண்களில் சூரியனை காண்பது கடினம். எனவே, இந்த வளையத்தை நேரடியாக பார்க்கக் கூடாது. இது தவிர சன் ஃபில்ட்டருடன் கூடிய கண்ணாடிகளை பயன்படுத்தியே இந்த கிரகணத்தைக் காண முடியும்.

நாசா போன்ற விண்வெளி ஆய்வு அமைப்புகளின் யூடியூப் பக்கம் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் காணலாம்.

சூரியனை எப்போதுமே வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. சூரிய கிரகணத்தின்போது 99% சூரியன் மறைக்கப்பட்டிருந்தாலும் அதை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. அது விழித்திரையை பாதிக்கும் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் சவுந்தர்ராஜ பெருமாள்.

ரிங் ஆஃப் ஃபையர் எப்போது தெரியும்?

இந்தியாவின் சில பகுதிகளில் இது வளையம் போல நெருப்பு வளையம் போல காட்சியளிக்கும். ஆனால் சில பகுதிகளில் பகுதி அளகு மட்டுமே இந்த சூரிய கிரகணத்தை காண முடியும்.

சூரிய கிரகணம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் கர்சானாவில் ஞாயிறு காலை 10.12 மணிக்கு இந்த சூரிய கிரகணம் தொடங்கும் என்று கொல்கத்தாவில் உள்ள பிர்லா கோளரங்க இயக்குநர் தேவி பிரசாத் திவாரி தெரிவித்துள்ளார் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஜூன் 21 காலை 11:49 மணிக்கு வளையம் போல காட்சியளிக்கத் தொடங்கும் இந்த சூரிய கிரகணம், 11.50 மணிக்கு முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள சூரத்கார்க், அனுப்கார்க், ஹரியானாவில் உள்ள சிர்சா, ராடியா மற்றும் குருசேத்ரா, உத்தராகண்டில் உள்ள டேராடூன், சம்பா, சமோலி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் நெருப்பு வளையம் போல காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் போன்று இந்த வளைவு சூரிய கிரகணம் நீண்ட நேரம் தோன்றாது.

மிகவும் குறைவான நேரம் மட்டுமே நெருப்பு வளையம் தோன்றும்.

தமிழகத்தில் எப்போது சூரிய கிரகணம் தெரியும்?

சென்னையில் 10:22 மணிக்கு தொடங்கும் இந்த சூரிய கிரகணம் மதியம் 1:41 வரை அதிகபட்ச கிரகணம் 11:58 மணிக்கு தெரியும்.

தமிழகத்தில் இது பகுதி அளவு சூரிய கிரகணம் மட்டுமே தெரியும். தமிழகத்தில் 34% மட்டுமே சந்திரன் சூரியனை மறைக்கும் என்பதால் வடமாநிலங்களைப் போல வளைவு சூரிய கிரகணம் தெரியாது.

சூரிய கிரகணம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு நேரங்களில் இந்த சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் காலை 10: 22 முதல் மதியம் 1:41 வரையிலும், பெங்களூரில் 10:13 முதல் 1:31 வரையிலும், டெல்லியில் 10:20 முதல் 1:48 வரையிலும், மும்பையில் 10 மணி 1:27 வரையிலும் கொல்கத்தாவில் 10:46 முதல் 2:17 வரையிலும் தெரியும்.

ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில்தான் ஞாயிறு நிகழவுள்ள சூரிய கிரகணத்தை உலகிலேயே முதல் முறையாக மக்கள் பார்க்க உள்ளனர்.

அந்த சூரிய கிரகணம் தெற்கு சூடான், எத்தியோப்பியா, யேமன், ஓமன், சௌதி அரேபியா, இந்தியப் பெருங்கடல் பகுதி, பாகிஸ்தான் ஆகியவற்றைக் கடந்து இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தெரியும்.

இந்தியாவுக்கு பிறகு இந்தியாவின் கிழக்கே உள்ள திபெத், சீனா, தைவான் போன்ற நாடுகளில் இந்த சூரிய கிரகணத்தை காண முடியும்.

இந்த சூரிய கிரகணம் கடைசியாக பசிபிக் பெருங்கடலின் மத்திய பகுதியில் தெரியும்.