கீர்த்தி சுரேஷின் ’பெண்குயின்’

பொன்மகள் வந்தாள் படத்திற்குப் பிறகு, திரைக்கென திட்டமிடப்பட்டு ஓடிடியில் வெளியாகும் படம், பெண்குயின்.

ரிதம் (கீர்த்தி சுரேஷ்) நிறைமாத கர்ப்பிணிப் பெண். கணவன் கௌதம் (மாதம்பட்டி ரங்கராஜ்). ஆனால், அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அஜய் (அத்வைத்) என்றொரு குழந்தை உண்டு. அந்தக் குழந்தை தொலைந்துபோனதால், முந்தைய கணவனுடன் (லிங்கா) மணமுறிவு ஏற்பட்டு, கௌதமைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறாள் ரிதம். இந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, குழந்தை அஜய் இவள் கண்முன் வந்து நிற்கிறான். ஆனால், எதையும் பேசும் நிலையில் அந்தக் குழந்தை இல்லை.

இந்த நிலையில், அஜய்யை கடத்தியவன் திரும்பத் திரும்ப, ரிதமையும் குழந்தையையும் நெருங்குகிறான். அந்தக் கடத்தல்காரன் யார், எதற்காக குழந்தையைக் கடத்துகிறான் என்பதுதான் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லரின் மீதிக் கதை.

பெண்குயின் - சினிமா விமர்சனம்

படத்தின் துவக்கத்தில் நடக்கும் கொலை, இந்தக் கதைக்கான மனநிலையை அட்டகாசமாக ஏற்படுத்துகிறது. ஆனால், அந்தக் காட்சி முடியும்போது கொலைகாரன் குடையுடன் அருகில் உள்ள ஏரியின் தண்ணீரில் இறங்கி மூழ்கி மறையும்போதே, "ஒரு நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லரில் இப்படியெல்லாம் நமக்கு போக்குக்காட்டும் காட்சி வராதே" என யோசிக்க வைக்கிறது.

இந்த காட்சியை விட்டுவிட்டுப் பார்த்தால், முதல் பாதியில் மிக மெதுவாகத் துவங்கி, சிறிது நேரத்திற்குப் பிறகு சூடுபிடிக்கிறது படம். அதற்கேற்றபடி கீர்த்தி சுரேஷின் நடிப்பும் சிறப்பாக அமைய படத்தோடு ஒன்ற ஆரம்பிக்கும்போது, சொதப்ப ஆரம்பிக்கிறார் இயக்குனர்.

கனவுக் காட்சிகளை வைத்து அடிக்கடி பயமுறுத்துவது, எந்த இடத்திற்குப் போனால் ஆபத்து நிச்சயம் இருக்கும் எனத் தெரியுமோ, அந்த இடங்களுக்கு கர்ப்பிணிப் பெண்ணான ரிதம் தனியாகவே செல்வது போன்றவையெல்லாம் ஆயாசத்தை ஏற்படுத்துகின்றன.

பெண்குயின் - சினிமா விமர்சனம்

படத்தின் பிற்பகுதியில், கடத்தல்காரன் என ஒருவரைக் கைதுசெய்கிறார்கள். அந்த நபர் காவல்நிலையத்தில் வைத்து, 'ஒரு கதை சொல்லட்டா சார்?' பாணியில் கீர்த்தி சுரேஷிடம் விடுகதை போடுகிறார். அந்த நபருக்கு கடத்தல்காரரனைப் பற்றி எப்படி இவ்வளவு விஷயம் தெரியும், அப்படி தெரியும் என்றால் முன்பே சொல்லாமல் விடுகதை போடுவது ஏன் என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. அதுவும் அந்தக் கடத்தல்காரனின் வீட்டிலேயே மரண முகாம் நடத்தும் காட்சியெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே ஹாலிவுட் படங்களில் வந்தவை. தமிழிலும் பல படங்களில் வந்துவிட்டவை.

உண்மையான கடத்தல்காரர் என்று யாரை வேண்டுமானாலும் கொண்டுவந்து நிறுத்தி, இவர்தான் குழந்தையைக் கடத்தினார் என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொண்டு, படம் முடிந்தால் சரி என்ற நிலைக்கு வந்துவிடும்போது, சம்பந்தமில்லாமல் ஒருவரை கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அந்த நபர், தான் இப்படி குழந்தையைக் கடத்தி வைத்ததற்கு ஒரு அபத்தமான காரணத்தைச் சொல்கிறார். கண்டிப்பாக ஒரு நல்ல த்ரில்லருக்கான இலக்கணம் இதுவல்ல.

பெண்குயின் - சினிமா விமர்சனம்

படத்தில் கீர்த்தி சுரேஷைத் தவிர, மற்ற எல்லோருமே ரொம்பவும் சுமாராக நடிக்கிறார்கள். ரகுவாக நடிக்கும் லிங்கா, சற்று ஹைப்பராக நடிக்கிறார். கௌதமாக வரும் மாதம்பட்டி ரங்கராஜ், எல்லாவற்றுக்கும் ஒரே முகபாவத்தோடு இருக்கிறார்.

கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் இசையும் ஒரு நல்ல த்ரில்லருக்கான பின்னணியை சிறப்பாக உருவாக்குகின்றன. ஆனால், ஏனோதானோவென்ற கதை, நம்பமுடியாத திருப்பங்கள், நடிகர்கள் தேர்வு ஆகியவற்றால் மிகச் சாதாரணமான படமாக வெளியாகியிருக்கிறது 'பெண்குயின்'.



Advertisement