ட்டிலிருந்தே இணையம் வழியாக பணம் ஈட்ட 10 வழிகள்


வீட்டிலிருந்து புதிய வேலையை கண்டறிந்து பணியாற்றுவது சாத்தியமா என்ற கேள்விக்கு செல்வதற்கு முன்பு, உலகம் முழுவதும் தினமும் அலுவலகத்துக்கு சென்று வேலை செய்தவர்களில் கோடிக்கணக்கானோர் தற்போது வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக முதலில் பரிசோதனையின் அடிப்படையில் வீடுகளிருந்து செயல்பட ஆரம்பித்த கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதிவரை தொடர்ந்து வீடுகளிருந்தே பணியாற்றுவார்கள் என்று அறிவித்துள்ளன.

"அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை தற்போது வீடுகளிருந்து பணியாற்றுபவர்களே பூர்த்தி செய்கிறார்கள்" என்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொருளியல் பேராசிரியரான நிக்கோலஸ் புளூம்.

அதாவது, ஏற்கனவே இருக்கும் பணியை வீட்டிலிருந்தே செய்வது சாத்தியமெனில் புதியதொரு பணியை கண்டறிந்து சம்பாதிப்பதும் சாத்தியமே என்கிறார்கள் துறைசார் வல்லுநர்கள்.

எனவே, முதலாவதாக வீட்டிலிருந்தபடி, இணையம் வழியாக சம்பாதிப்பதற்காக 10 வழிகளை தெரிந்துகொண்டு பின்பு அதிலுள்ள சிக்கல்களை தெரிந்துகொள்வோம்.

இணையவழியே பாடம்/ மொழி கற்பித்தல்:

Online Job

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பலருக்கும் வேலைவாய்ப்பு பறிபோயிருப்பது உண்மைதான். ஆனால், இந்த காலத்தை உபயோகமான வழிகளில் செலவிடுவதற்கும் பலரும் ஆர்வமுடன் உள்ளனர்.

எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் வேலைவாய்ப்பற்று இருக்கும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், மொழியியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இணையம் வழியே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், பொருளியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களை கற்பிக்கலாம். மேலும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் தமிழரல்லாதோர் பலரும் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்இணையம் வழியே கற்கவும், கற்பிக்கவும் ஆர்வம் உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் சரியான இணையதளங்களை சுய உறுதிப்படுத்தலுக்கு பிறகு அணுகுவதன் மூலம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இணையதள வடிவமைப்பு/ செயலி உருவாக்கம்:

கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு மக்கள் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து பொருட்களை வாங்கும் பழக்கம் குறைந்துள்ளது. மாறாக, இணையம் வழியே பொருட்களை வாங்கவும் அல்லது இணையத்தில் தேடல் மேற்கொண்டு அதன் மூலம் நேரில் செல்ல வேண்டிய கடையை தெரிவு செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது.

எனவே, பல்வேறு தொழில்களை சேர்ந்தவர்களும் தங்களது தயாரிப்பை இணையம் வழியே சந்தைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்தினால் நிறுவனங்களுக்கு தேவையான இணையதளம், செயலி உள்ளிட்டவற்றை வீட்டிலிருந்தே மேம்படுத்தி தந்து வருமானம் ஈட்ட முடியும்.

சமூக ஊடக மேலாண்மை:

Online Job

கூகுள் உள்ளிட்ட தேடுபொறி வழியே பொருட்களை தேடி கண்டறிந்து வாங்கும் போக்கு ஒருபுறமிருக்க, நிறுவனங்களின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு பொருட்களை வாங்குபவர்களும் அதிகரித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பல்வேறு நிறுவனங்களும் மாதக் கணக்கில் செயல்பாட்டிலில்லாத தங்களது சமூக ஊடக பக்கங்களை புதுப்பித்து வருகிறார்கள். சமூக ஊடகத்தில் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை பதிவுகளின் வாயிலாக திரட்ட தெரிந்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி:

கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு பல்வேறு நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளிடம் பேசுவதற்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலையை பலரும் சந்தித்திருக்கலாம்.

இந்த நிலையில், வீட்டிலிருந்தே வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றிற்கு பதிலளிக்கும் பணியை மேற்கொள்வதில் விருப்பமுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியமுள்ளது.

தரவுப் பதிவு:

என்னதான் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும், தரவுப் பதிவு (Data Entry) செய்யும் வேலைக்கு இன்னமும் மனிதவளமே பெரும்பாலும் தேவைப்படுகிறது. மொழியறிவு, அடிப்படை கணினி - இணைய பயன்பாடு, தட்டச்சு தெரிந்தவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் தரவுப் பதிவு செய்யும் பணி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

 வரைபடம்

 

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 17 ஜூலை, 2020, பிற்பகல் 1:26 IST

உள்ளடக்க எழுத்தாளர்:

ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டை, தயாரிப்பை வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதில் உள்ளடக்க எழுத்தாளர்களின் (Content writers) பணி குறிப்பிடத்தக்கது. ஒரு நிறுவனத்தின் இணையதளம் தொடங்கி, தயாரிப்புகளின் விளக்க கட்டுரை, காணொளி, சமூக ஊடக விளம்பரம் வரை என பல்வேறு நிலைகளிலும் உள்ளடக்க எழுத்தாளர்களின் உதவி தேவைப்படுகிறது.

எனவே, தேர்ந்த மொழியறிவு, நேர்த்தியான எழுத்து நடை உள்ளிட்ட திறன் கொண்டவர்கள் இந்த பணியை வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம்.

பின்னணி குரல் கலைஞர்:

Online Job

நாளுக்குநாள் பிறமொழி நாடகங்கள், திரைப்படங்கள், தொடர்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்வது அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட இணையவழி காணொளி தளங்களில் இவ்வாறான படைப்புகளை காண முடிகிறது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே வீட்டிலேயே குரல் பதிவு செய்வதற்காக சாதனங்களை கொண்ட கட்டமைப்பை உருவாக்கும் போக்கு இருந்து வந்த நிலையில் அது இப்போது காலத்தின் கட்டாயமாகவும் மாறி வருகிறது எனலாம். எனவே, நல்ல குரல்வளமும், தக்க தொழில்நுட்ப சாதனங்களும் உள்ளவர்களும் இந்த பணிவாய்ப்பை முயற்சித்து பார்க்கலாம்.

மொழிபெயர்ப்பு:

எண்ணற்ற நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் மொழிபெயர்ப்பு பணிக்கான தேவை எப்போதும் உள்ளது. பல வெளிமாநில, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை (இணையதளம், மென்பொருள், செயலி) தன்மொழியாக்கம் (Localization) செய்து வருவதால் மொழிபெயர்ப்பு பணி முக்கியத்துவம் பெற்றுவருகிறது.

உங்கள் மாவட்டத்தை தெரிவு செய்யுங்கள்

 

நல்ல மொழியறிவும், ஆர்வமும், தேடலும் கொண்டவர்கள் கட்டுரைகளை மொழியாக்கம் செய்வது முதல் ஒட்டுமொத்த நூலையே மொழியாக்கம் செய்வதற்கான வாய்ப்பு வரை கிடைக்கக் கூடும்.

காணொளி தொகுப்பாக்கம்/ வரைகலை:

நமக்கு வேண்டிய விடயங்களை தெரிந்துகொள்ள நூலகங்களுக்கு சென்று படிப்பது, இணையத்தில் கட்டுரைகளை தேடுவது உள்ளிட்டவற்றிற்கு அடுத்து தற்போது அனைத்திற்கும் காணொளி வழி விளக்கங்களை தெரிந்துகொள்ள விரும்பும் போக்கு தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகரித்துள்ளது.

எனவே, பயன்பாட்டாளர்களை கவனத்தை தக்க வைக்கும் வகையில் காணொளிகளை தொகுப்பாக்கம் செய்பவர்கள் இந்த பணியை வீட்டிலிருந்தபடி மேற்கொள்ள முயற்சி செய்யலாம். ஆனால், இந்த பணிக்கு தேர்ந்த மென்பொருள் பயன்பாட்டு அறிவும், சிறந்த கணினியும் தேவை.

பங்குச்சந்தை:

Online Job

அனைத்து விதமாக தொழில்துறைகளும், நிறுவனங்களும் பணம் திரட்ட பங்கேற்கும் பங்குச்சந்தையை முதலீட்டை மேற்கொள்ளும் இடமாக பலரும் கொண்டுள்ளனர். ஆனால், மிகப் பெரிய ஆபத்து இருப்பது தெரிந்தும் தனது அனுபவம், அறிவு, துணிவு உள்ளிட்டவற்றை முதலீடாக கொண்டு குறுகிய காலத்தில் பங்குச்சந்தையில் பணமீட்டுபவர்களும் உண்டு.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில், அதன் தாக்கம் பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. இருப்பினும், பொருளாதாரத்தையும் பங்குச்சந்தை நகர்வுகளையும் உற்றுநோக்கி அனுபவத்தின் மூலம் சரியான முடிவுகளை எடுக்க தெரிந்தவர்களுக்கு பங்குச்சந்தை எப்போதும் ஒரு பணமீட்டும் களமே. வெறும் திறன்பேசியை கொண்டே வீட்டிலிருந்தபடி வர்த்தகத்தில் ஈடுபடலாம்.

எச்சரிக்கையுடன் இருங்கள்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பத்து வகையான பணிகளுக்கான வேலைவாய்ப்பையும் இணையத்தின் வழியே பெற்று, வீட்டிலிருந்தே மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், இணையத்தின் வழியே பணிவாய்ப்பை பெறுவதிலும், பெற்ற பிறகு செய்த வேலைக்கான பணத்தை பெறுவதிலும் எண்ணற்ற முறைகேடுகள் நடப்பதால், மிகுந்த எச்சரிக்கையாக சுய-சரிபார்ப்புக்கு பிறகே செயல்பட வேண்டியது அவசியம்.

ஏனெனில், வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக கருதப்படும் இணையத்தில் முறைகேடுகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், இணைய வழி பணிவாய்ப்பு தேடலின்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்களை பட்டியலிடுகிறோம்.

Online Job
  • பணிவாய்ப்பை வழங்கும் இணையதளத்தின் உண்மைத்தன்மை, பின்புலம், பயனாளர்களின் கருத்துகளை கவனத்தில் கொள்ளுங்கள்.
  • உங்களது தகுதிக்கு ஏற்ற பணியை தேடுங்கள். ஆசை வார்த்தைகளை நம்பாதீர்கள்.
  • பெரும்பாலான பணிவாய்ப்பு இணையதளங்கள் முன்பணம் கோருவதில்லை. எனவே, இதில் எச்சரிக்கையாக இருங்கள்.
  • பணிவாய்ப்பு தேடும் இணையதளம்/ செயலி குறித்து தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வாடிக்கையாளரின் பின்னணி குறித்தும் தெரிந்துகொள்வதும் அவசியம்.
  • பிரபல நிறுவனங்களின் பெயரில் பல விளம்பரங்களை உடனடியாக நம்பிவிடாது அதன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று அதன் உண்மைத்தன்மையை ஆராயுங்கள்.
  • உங்களது தனிப்பட்ட விவரங்களை பகிரும்போது எச்சரிக்கையாக இருங்கள்.
  • நிறுவனங்களின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் இணையதளத்தில் அதன் அங்கீகாரம் குறித்து உறுதிசெய்யவும்.
  • பணிவாய்ப்பு கிடைக்கும்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு தெரிந்துகொண்டு ஒப்புதல் தெரிவிக்கவும்.