தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியிலேயே மலையகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது

(க.கிஷாந்தன்)

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியிலேயே மலையகத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. எனவே, எம்மை வெற்றிபெற வைக்கவேண்டியது மக்களின் பொறுப்பாகும் - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான திகாம்பரம் தெரிவித்தார்.

 

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணியினதும், பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சரும்,  நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தலைமையில் 15.07.2020 அன்று அட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் மதியம் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் எதிர்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவரோடு தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வே.இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.ரவீந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்.

 

இதன்போது திகாம்பரம் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

" கண்டியில் இருந்து வந்த ஒருவர், பெட், போல்களை வழங்கி வாக்கு கேட்கிறார். மற்றைய தரப்பு அனுதாப வாக்கு திரட்டுகின்றது. எமது அணி மட்டுமே மக்களுக்கு சேவைகளை செய்துவிட்டு, அவற்றை சுட்டிக்காட்டு ஓட்டு கேட்கின்றது. எனவே, நுவரெலியா மாவட்டத்தில் எமது வெற்றி நிச்சயம். ஐந்து ஆசனங்களை வென்று மாவட்டத்தையும் கைப்பற்றுவோம்.

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதுபோல பெருந்தோட்டத்துறையில் அதிகாரிகளாக பணிபுரிபவர்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படவேண்டும். அவர்களுக்கான வீட்டு திட்டமும் அவசியம்.

 

இந்த நாட்டில் இனவாத தலைவர்களே இருக்கின்றனர். ஆனால், அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடியவரே சஜித். அவரது கரங்களை நாம் பலப்படுத்தவேண்டும். தமிழ், முஸ்ஸிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என விமல் கூறுகின்றார். அப்படியானால் எதற்காக அவர்களுக்கு நாம் வாக்களிக்கவேண்டும்.

 

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவராக தொழிலாளி ஒருவரே வரவேண்டும். எனக்கு பின்னர் எனது மகனை நான் கொண்டுவரப்போவதில்லை." - என்றார்.Advertisement