தேர்தல்: சுகாதார கட்டுப்பாடுகளுடன் நடக்கிறது

#RA.Pirasaath.

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்காக 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்றைய தினம் நடைபெறுகின்றது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 20 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயாதீன குழுக்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றன.

இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம், ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களில் இன்று மக்கள் வாக்களிக்கின்றனர்.

196 மக்கள் பிரதிநிதிகள் இந்த தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளதுடன், எஞ்சிய 29 வேட்பாளர்கள் தேசிய பட்டியலின் ஊடாக தெரிவாகவுள்ளனர்.

225 நாடாளுமன்ற உறுப்பனர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெறுகின்றது.

அதிகபட்சமாக 17 லட்சத்து 85 ஆயிரத்து 964 பேர் வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தில் உள்ளனர்.

மிகவும் குறைவான வாக்காளர்களைப் பெற்ற மாவட்டம் தமிழர் பகுதியிலேயே உள்ளது.

இதன்படி, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்திலேயே குறைவான வாக்காளர்கள் உள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 24 பேர் இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலும், நாடாளுமன்றத் தேர்தலும்

இலங்கை

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி நள்ளிரவு கலைத்திருந்தார்.

இதன்படி, ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அன்றைய தினம் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது.

எனினும், இலங்கையின் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்த பின்னணியில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி பிற்போடப்பட்டது.

இந்த நிலையில், இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட தேர்தலை இன்றைய தினம் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது.

இதன்படி, இன்றைய தினம் முழுமையாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் தேர்தல் நடத்தப்படுகின்றன.

சுகாதார அமைச்சின் வழிக்காட்டலின் பிரகாரம் இந்த முறை தேர்தல் நடத்தப்படுகின்றமை விசேட அம்சமாகும்.Advertisement