#அக்கரைப்பற்று;9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த பிரிவுகள் விடுவிப்பு



வி.சுகிர்தகுமார் 0777113659  


  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள்  21 நாட்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.


அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 5, 14, மற்றும் நகர் பிரிவு 3 உம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் அக்கரைப்பற்று 8/1, 8/3, 9 ஆகிய பிரிவுகளும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை-1 ஓலுவில் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்  ஏனைய பிரிவுகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனை சுகாதார அமைச்சின் தகவல்களும் நேற்று உறுதிப்படுத்தின.
இந்நிலையில் மக்களது இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பிய நிலையில் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொருட்கொள்வனவிற்காக சந்தைப்பகுதிகளுக்கு சென்றதை அவதானிக்க முடிந்தது.
மேலும் பொதுமக்கள் வங்கிகளில் பணம் மீளப்பெறுவதற்காக காத்திருந்ததையும் காண முடிந்தது.
ஆயினும் பாடசாலைகள் மற்றும் பெரும்பாலான அத்தியாவசிய தேவைகளற்ற வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இதேநேரம் அக்கரைப்பற்று பொலிசார் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் விடுவிக்கப்படாத பிரதேசங்கள் தொடர்பிலும் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றியும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதேச சுகாதார பணிமனை மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக மக்களுக்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவறுத்தல் வழங்கப்பட்டு வருவதுடன் விசேட கூட்டங்கள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.