அட்டன், நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நாளை முதல் பூட்டு



 (க.கிஷாந்தன்)

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தினை நாளை (07) திகதி முதல் காலவரையறையின்றி பூட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டி. சந்திரராஜன் தெரிவித்தார்.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவருக்கும் அவரது குழந்தைகள் இருவருக்கும் கொவிட் - 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் செயற்படும் பொகவந்தலாவை ஆரியபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கும், அவரது குழந்தைகள் இருவருக்கும் கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியை கடந்த 28ம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1500 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 76 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

இதனால் அப்பாடசாலையின் அதிபர் உட்பட 76 ஆசிரியர்களையும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பினை பேணிய 100 மாணவர்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த ஆசிரியை நெருங்கி பழகிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நாளை மறுதினம் (07) ம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தை தொற்று நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு உட்பிரவேசிக்க கூடாது என அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.