சிரேஷ்ட பிரஜைகளை இலக்கு வைத்து



 வி.சுகிர்தகுமார் 0777113659 


 கொரோனா இலகுவில் தொற்றும் வாய்ப்புள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை இலக்கு குழுவாகக் கொண்டு கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச மக்களையும், சொத்துக்களையும் அனர்த்தத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான வழிகாட்டல்கள், திட்டமிடல்களை வகுத்துக் கொள்வதற்கான செயலமர்வு இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.
இதில் வளவாளர்களாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் பதில் சுகாதார வைத்திய அதிகாரியுமான மசூத் மற்றும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவிப்பணிப்பாளர்; எம்.ஏ.சி.மொகமட் றியாஸ்; கலந்து கொண்டதுடன் உதவிப்பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரன், கணக்காளர் ஆ.அரசரெத்தினம், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.பரமானந்தம் ஆகியோரும் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தனர்.
இச்செயலமர்வில் கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர்.
இச்செயலமர்வில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை அடையாளப்படுத்தி அவர்களை இலக்கு குழுவாகக் கொண்டு கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் விசேட கண்காணிப்பை மேற்கொள்ளல்
இரண்டாம் கட்ட பிசிஆர் பரிசோதனைகளை திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளுதல்
பிரதேச மட்ட, கிராமிய மட்ட கோவிட் - 19 குழுக்களை தயார் நிலையில் வைத்துக்கொள்வதை உறுதிப்படுத்தல்.
பருவகால பெயர்ச்சி மழை, வெள்ள அனர்த்தங்களுக்கு தயார் நிலைப்படுத்தல் செயற்பாடுகளை பிரதேச மற்றும் கிராமிய மட்டங்களில் ஏற்படுத்தல்
இவ்வாறான அனர்த்தங்களின் போது கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையிலிருந்து தவிர்த்து பாதுகாப்பை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அனர்த்தத்தின் போது எவ்வாறு நடந்துகொள்வது தொடர்பான அறிவுரைகள் தெளிவுகள் ஏற்படுத்தப்பட்டன.