நான் வருவேன், ஆனா எப்ப வருவேன், எப்படி வருவேன்...........................


 


தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தலில் போட்டியிட ஏதுவாக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தமது அரசியல் கட்சியை தொடங்கவிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் 1990களில் இருந்து காத்திருந்திருக்கிறார்கள். அவரது அரசியல் ஆர்வம் எப்படி தொடங்கி, எங்கு சென்று எவ்வாறு நனவாகும் கட்டத்தை எட்டியிருக்கிறது என்பதை தொகுத்து வழங்குகிறோம்.


தமிழ்நாட்டில் ரஜினிக்கு இருந்த அரசியல் ஆர்வம் 1996ஆம் ஆண்டில்தான் வெளிப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அரசில் ஊழல் கரைபுரண்டு ஓடியாகவும், தனது வளர்ப்பு மகன் வி.என். சுதாகரனுக்கு அவர் நடத்திய ஆடம்பர திருமணம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த வேளையில், இந்த ஆராஜக ஆட்சி தொடங்கக் கூடாது என்று ரஜினிகாந்த் பகிரங்கமாக அறிவித்தார்.


ரஜினியின் முதல் அரசியல் முழக்கம்

ஆனால், இதற்கு முன்னதாகவே அரசியல் விவகாரத்தில் தனது கருத்தை 1995ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் வெளியிட்டார். அப்போது எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன் பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பரவியிருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பகிரங்கமாக முழங்கினார் ரஜினிகாந்த்.


இந்த நிலையில், 1996இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற தனிக்கட்சி தொடங்கினார் மூப்பனார். அப்போது ஆட்சியில் இருந்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்ததால், அதற்கு உடன்படாமல் தனி கட்சியைக் கண்டார் மூப்பனார். அவரது கட்சி திமுக கூட்டணியுடன் கைகோர்த்தது.


ரஜினி அரசியல்: "ஆட்சி மாற்றம் வரும்; உயிரை கொடுக்கவும் தயார்"

ரஜினி கட்சி ஜனவரியில் தொடக்கம்: டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு

ரஜினி குரலுக்கு கிடைத்த மரியாதை

அந்த அணிக்கு ரஜினிகாந்த் வெளிப்படையாக ஆதரவு வழங்கினார். அரசியலில் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு அதுவே ரஜினிகாந்த் முதல் முறையாக வழங்கிய ஆதரவாக கருதப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் அதிமுக அரசு மீதான அதிருப்தி அலை, தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசுக்கு பெருவாரி வாக்குகளை பெற்றுத்தந்து பெரும்பான்மையுடன் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் உருவாக்கியது. இந்த வெற்றியில் ரஜினின் குரலும் முழக்கமும் இருந்தாதக கருதப்பட்டது. அவரது ரசிகர்கள் தேர்தல் களத்தில் திமுக அணிக்கும் மூப்பனார் கட்சியின் வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பணியாற்றினார்கள்.


ஆனால், 1998ஆம் ஆண்டில் மக்களவைக்கு தேர்தல் வந்தபோது, மீண்டும் திமுக கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவை வழங்கினார். ஆனால், அந்த காலகட்டத்தில் அவரது குரலுக்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்கவில்லை. அந்த தேர்தலில் அதிமுக அணி அமோக வெற்றி பெற்றது. இதன் பிறகு மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான கருத்துகளையும் விமர்சனங்களையும் வெளியிடுவதை ரஜினிகாந்த் குறைத்துக் கொண்டார்.


ரஜினி

பட மூலாதாரம்,RAJINIKANTH

2002இல் காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னை கடுமையாக இருந்தபோது, கர்நாடகாவைச் சேர்ந்த ரஜினி அந்த விவகாரத்தில் வாய் திறக்க மறுப்பதாக சில அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, மெளனம் கலைந்த ரஜினி, தமிழ்நாட்டில் அப்போது திரைப்படத்துறைனர் காவிரி விவகாரத்தில் மேற்கொண்ட உண்ணாவிர போராட்டத்தில் அமர்ந்து தனது ஆதரவு தமிழக மக்களுக்கே என்று தெரிவித்தார். மேும், இந்த பணிக்காக ரூபாய் ஒரு கோடி தருவதாகவும் ரஜினி கூறினார்.


2004ஆம் ஆண்டில் பாபா படத்தில் ஆன்மிக நாயகனாக அறிமுகமாகி அரசியலுக்குள் நுழைவதை மையமாக்கும் வகையில் படம் தயாராகியிருந்தது. அந்த படத்தை திரையிட முடியாத அளவுக்கு டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி முட்டுக்கட்டையாக இருந்தது. பல இடங்களில் பாமக தொண்டர்களுக்கும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இடையே மோதல், கைகலப்பு ஏற்பட்டது. அதன் உச்சமாக, சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்த ரஜினி, அப்போது நடந்த மக்களவை தேர்தலில் பாமகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று முழங்கினார். ஆனால், அவரது குரலுக்கு வலுவில்லாதது போல, பாமக வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆட்சியிலும் இடம்பிடித்தனர்.


தேர்தல் கருத்துகளை தவிர்த்த ரஜினி

இதன் பிறகு ரஜினியின் அரசியல் தலையீடோ, அரசியல் கருத்துகளோ தவிர்க்கப்பட்டு வந்த நிலையில், 2004, 2006, 2008 ஆகிய காலகட்டங்களில் செய்தியாளர்களை சந்திக்கும்போது எல்லாம் ரஜினியிடம் அவரது அரசியல் நிலை குறித்து கேட்கப்பட்டது. ஆனால், நேரடியாக பதில் தருவதை மறுத்த ரஜினிகாந்த், "நேரம் வரட்டும், காலம் பதில் சொல்லும்" என்றவாறு ஒரு எதிர்பார்ப்பு உணர்வை மட்டுமே மக்களிடையே ஏற்படுத்தி வந்தார். இவ்வாறாக 2008ஆம் ஆண்டு முதல் அடுத்த ஆறு ஆண்டுகள் கழிந்தன.


ரஜினி

பட மூலாதாரம்,RAJINIKATH

இந்த நிலையில், 2014ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடந்தபோது அப்போது பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் களமிறக்கப்பட்ட நரேந்திர மோதி, சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டிலேயே சந்தித்துப் பேசினார். அப்போது ரஜினி, மோதி சிறந்த தலைவர், நல்ல நிர்வாகி. அவர் வெற்றி அடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார். ஆனால், வெளிப்படையாக பாஜக கூட்டணிககுதான் என்ற அறிவிப்பை அவர் வெளியிடவில்லை.


ஜெயலலிதா

பட மூலாதாரம்,TNDIPR

2014ஆம் ஆண்டில் சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைக்கு சென்று 20 நாட்களில் வெளியே வந்தபோது, ரஜினியிடம் அது குறித்துகருத்து கேட்டபோது, "மகிழ்ச்சி" என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.


ரஜினி

பட மூலாதாரம்,RAJINIKANTH

கருணாநிதி, ஜெயலலிதா மறைவு

இந்த நிலையில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். தீவிர அரசியலில் ஈடுபட்ட கருணாநிதியின் உடல்நிலையும் பலவீனம் அடைந்து அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார்.


இதற்கு இடைப்பட்ட காலத்தில் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி கருணாநிதியை சந்தித்த ரஜினிகாந்த், அரசியலில் சேரும் தனது முடிவு தொடர்பாக அவரை சந்தித்து வாழ்த்து பெற்றதாக தெரிவித்தார். அவரது அறிவிப்பு மீண்டும் ரஜினியின் அரசியல் ஆர்வத்துக்கு உயிர்ப்பை கொடுத்தது போல காணப்பட்டாலும், முன்பைப் போல பரவலான ஈர்ப்பை அது பெறவில்லை.


ரஜினியின் அரசியல் பிரவேச பின்னணியில் இருப்பது யார்?

"நான் அரசியலுக்கு வருவது உறுதி... காலத்தின் கட்டாயம்": நடிகர் ரஜினிகாந்த்

2019ஆம் ஆண்டில் மக்களவை தேர்தல் நடந்தபோது, ரஜினியின் அரசியல் நிலை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, யாருக்கும் ஆதரவு இல்லை. ரஜினி ரசிகர் மன்றம் தேர்தலில் போட்டியிடாது. 2021ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று மட்டும் ரஜினிகாந்த் கூறினார். ஆனால், அவர் அரசியல் கட்சியை தொடங்க எந்த ஏற்பாடுகளையும் செய்யாததால் அதன் பிறகு ரஜினிகாந்த் தேர்தல், அரசியல் நிலை தொடர்பாக பேசும் கருத்துகள், அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வந்தன.


தமிழக முதல்வர் எடப்பாடி, தமிழக அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், திமுக தலைவர்கள் என பலரும் "முதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும். அதன் பிறகு அது பற்றி பேசுகிறோம். கட்சி ஆரம்பிக்க அனைவருக்கும் உரிமை உண்டு," என்று அவர்கள் தெரிவித்து வந்தனர்.


மேலும் சில தமிழக அமைச்சர்கள், "குழந்தையே பிறக்காமல் பிள்ளைக்கு பேர் வைக்க கோருவது போல இந்த கேள்வி உள்ளது," என்று கூறினார்கள்.


இந்த நிலையில், 1991இல் தொடங்கிய ரஜினியின் தேர்தல் ஆசை, 1996ஆம் ஆண்டில் தேர்தல் அரசியல் ஆர்வமாக உருப்பெற்று பல காலகட்டங்களில் முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பெற்று கடைசியாக 2020ஆம் ஆண்டு டிசம்பரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்திருப்பதாகவே அவரது செயல்பாடுகள் பார்க்கப்படுகின்றன.