கல்முனை பிராந்தியத்தில் மாத்திரம் ஏன் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படும் செயற்பாடுகள்இதுவரை முன்னெடுக்கப்படவில்லை


 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  இலங்கையில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படும் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கல்முனை பிராந்தியத்தில் மாத்திரம் ஏன் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என பொதுமக்களும் அரச அலுவலர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அரசியல்வாதிகளும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் சுகாதாரத்துறையும் மௌனம் காப்பது தொடர்பிலும் கவலை அடைந்துள்ளனர்.
இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படும் நிலையில் கல்முனை பிராந்தியம் மட்டும் ஏன் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகின்றது எனவும் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக கல்முனை பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான அரச திணைக்களங்களும் தற்போது தமது அன்றாட நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மக்களும் திறந்து விடப்பட்டுள்ளனர்.. ஆனாலும் எந்தவொரு உத்தியோகத்தர்களுக்கோ பொதுமக்களுக்கோ தடுப்பூசிகள் ஏற்றப்படவில்லை. இந்நிலையில் அரச அலுவலர்கள் தங்களது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் பிற பிரதேசங்களில் வீடுகளில் பாதுகாப்புடன் உள்ள பொதுமக்களுக்கு கூட இரண்டாவது தடவையும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையினால் கல்முனை பிராந்தியத்தில் வாழும் மக்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதுடன் தாம் புறக்கணிக்கப்படுகின்றோமா எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறையும் அதிகாரிகளும் விரைவில் தடுப்பூசி வழங்கப்படும் என பலமுறை உறுதி அளித்தும் இது வரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆகவே இது தொடர்பில் சம்மந்தப்;பட்டவர்கள் விரைவான நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன் மூலம் சுட்டிக்காட்டப்படுகின்றது