அக்கரைப்பற்று சதொச நிலையத்தில்சீனி மூடைகள் இறக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் முடிவடைந்து விட்டதால் மக்கள் கொந்தளிப்பு





 (சுகிர்தகுமார் )


  அக்கரைப்பற்று அரச சதொச விற்பனை நிலையத்தில் இன்று சீனி மூடைகள் இறக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் முடிவடைந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதுடன் அவர்கள் ஆத்திரமடைந்த நிலையில் காணப்பட்டனர்.
இன்று காலை முதல் சீனி மூடைகள் இறக்கப்படுவதாக மக்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு கூடிய மக்கள் நீண்ட வரிசையில் சீனியை பெற காத்திருந்தனர்.
இந்நிலையில் நண்பகல் அளவில் லொறி மூலம் சீனி மூடைகள் இறக்கப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் சில மணித்தியாலங்களில் சீனி முடிவடைந்து விட்டதாகவும் மேலும் 60 பேருக்கு மாத்திரம் சீனி வழங்கப்படும் என சதொசவின் காவலாளி ஒரு சில மணிகளில் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசை திட்டிதீர்த்தனர். இதேநேரம்  சுமார் 100 பேர்வரையிலுமே சீனி வழங்கப்பட்டிருக்காலம் எனவும் அப்படி பார்க்கையில் ஒருவருக்கு ஒரு கிலோ எனும் அடிப்படையில் பார்த்தாலும் 2 மூடைகள் மாத்திரம் விநியோகிக்கப்பட்டிருக்கும் எனவும் மக்கள் கூறினர். ஒரு சதொச நிலையத்திற்கு இரு மூடைகளா அரசு அனுப்புகின்றது எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் சிலருக்கு அளவுக்கதிமாக சீனி விநியோகம் இடம்பெறுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தினர். இவ்வாறிருக்கையில் ஒருவர் அளவுக்கதிமாக சீனி கொள்வனவு செய்துள்ளதாகவும் அடையாளப்படுத்தினர். அவர் சதொச நிலையத்தில் இருந்து வெளிவருகையில் அவரது பையை பார்வையிட மக்கள் எத்தணித்த நிலையில் குறித்த நபர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தம்வசம் வைத்திருந்த பையினை எடுத்து சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
சதொச நிலையம் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முறைப்பாடுகளையும் மக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் இதுதொடர்பில் மக்கள்  முறையான  நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.