(க.கிஷாந்தன்)
கொட்டகலை - தலவாக்கலை மார்க்கத்தில் பத்தனை சந்தியில் அமைந்துள்ள கடைத்தொகுதி யாரால் அமைக்கப்பட்டது என்பது உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் குறித்த கடைத்தொகுதி சமூர்த்தி
பயனாளிகளுக்கென்று 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதொன்று என்ற கோரிக்கையை முன் வைத்து 18.07.2022 அன்று குறித்த இடத்தில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் சமூர்த்தி பயனாளிகளும் அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கொட்டகலை பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சுப்ரமணியம் ராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்ட மக்கள், எமது பிரதேசத்தில் எமக்கே தெரியாமல் யாரோ ஒரு கடைத்தொகுதியை அமைத்துள்ளனர். இது தொடர்பாக சில ஊடகங்களில் முழு விபரங்களுடன் கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது.
அதற்குப்பிறகே இது மக்கள் பயன்பாட்டுக்கு ஆரம்பிக்கப்பட்டதென்ற விபரம் தெரியவந்துள்ளது. எனவே தனிநபர்களால் இவ்விடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை தெளிவாகியுள்ளது. இதை மக்களுக்கே வழங்க வேண்டும் எனக் கோருகிறோம். எம்மால் சமூர்த்தி சேவைகளைப் பெற தலவாக்கலை வரை பயணிக்க முடியாது என்று கூறினர்.
இவ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ராஜா கூறுகையில்,
இந்த கட்டிடம் அமைந்ததன் பின்னணியில் பல ஊழல்கள் அரங்கேறியுள்ளன. இது குறித்து நான் கடந்த இரண்டு வருடங்களாக கேள்வி எழுப்பியும் கொட்டகலை பிரதேச சபை தவிசாளர் சரியான பதில்களை எனக்கு வழங்கவில்லை. தமக்கும் இந்த கட்டிடத்துக்கும் சம்பந்தமில்லை என்கிறார். அருகிலுள்ள ஆலய நிர்வாக சபையினால் இது 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்கிறார். இந்த ஆலயத்துக்கு அப்படி ஒரு நிர்வாக சபையே கிடையாது. ஏனென்றால் நான் இந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர். 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதிக்கு எவ்வாறு 2022 ஆம் ஆண்டு கட்டிடம் கட்ட முடியும்? தனது நிர்வாக எல்லைக்குள் இருக்கும் பகுதியில் ஒரு கட்டிடம் எழுவதை எவ்வாறு பிரதேச சபை நிர்வாகம் பார்த்துக்கொண்டிருந்தது? இதன் பின்னணி சூழ்ச்சி வெளிக்கொணர வேண்டும். இது மக்களுக்கு சேர வேண்டியது.


Post a Comment
Post a Comment