ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக மற்றும் மிகவும் இளம் வயதில் 5000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தெரிவு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக பிரதீகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. நடப்பு உலகக்கிண்ண தொடரில் முதல் மூன்று போட்டிகளில் பெரிய அளவில் ஓட்டங்களை குவிக்கத் தவறிய ஸ்மிருதி மந்தனா, இன்றையப் போட்டியில் அரைசதம் விளாசியுள்ளார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வரும் பிரதீகா ராவலும் அரைசதம் கடந்துள்ளார்.
இன்றையப் போட்டியில் அரைசதம் கடந்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாகவும், மிகவும் இளம் வயதிலும் 5000 ஓட்டங்களைக் கடந்த வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். 112 இன்னிங்ஸ்களில் ஸ்மிருதி மந்தனா 5000 ஓட்டங்களைக் கடந்து அசத்தியுள்ளார்.


Post a Comment
Post a Comment