இரான் ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்கப்படும் நிலையில் ரஷ்யா, சீனா என்ன செய்கின்றன?



 


மனித உரிமைகளை விடவும் அரசின் உரிமைகளே மிகவும் முக்கியமானது மற்றும் உள்நாட்டில் அரசுக்கு அளவு கடந்த அதிகாரம் என்பதை அடிப்படையாகக் கொண்ட ரஷ்யாவின் பன்முறை ஒழுங்கிற்கு இரான் பொருத்தமானதாக இருக்கிறது. இத்தகைய ஒரு அரசு கவிழ்வது அந்த மாதிரி மீது விழுந்த அடியாக மாறும்.


அதேநேரத்தில், வெனிசுவேலா, சிரியா அல்லது 2025-இல் இஸ்ரேல்-இரான் இடையே நடைபெற்ற 12 நாள் போர் என எதுவாக இருந்தாலும் அதன் கூட்டாளிகளுக்காக தான் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளப் போவதில்லை என்பதை ரஷ்யாவின் நடவடிக்கை உணர்த்தியுள்ளது.



படக்குறிப்பு,ரஷ்யாவின் நெருக்கமான கூட்டாளியாக இரான் மாறியுள்ள போதிலும் அந்நாட்டுக்கான ரஷ்யாவின் ஆதரவு வெறும் பெயரளவில் உள்ளது.

யுக்ரேன் போரில் முனைப்பு காட்டும் ரஷ்யா, ராஜாங்க ஆதரவு மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தவிர வேறு எதுவும் வழங்க விருப்பமில்லாமலும் முடியாமலும் உள்ளது.


12025 ஜனவரி 17 அன்று கையெழுத்தான ரஷ்ய-இரானிய உத்திசார் கூட்டணி ஒப்பந்தம் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தமாக மட்டுமே உள்ளது.


தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் கூட்டு பயிற்சிகளை மேற்கொள்ளவும் பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யவும் ரஷ்யா மற்றும் இரான் உறுதி கொண்டன. ஆனால் தாக்குதல் நடந்தால் ஒருவரை ஒருவர் பாதுகாக்க எந்த உத்தரவாதமும் அதில் இல்லை. இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதார தொடர்புகள் மிதமான நிலையிலே உள்ளன, வர்த்தகம் 4 பில்லியன் - 5 பில்லியன் டாலர்கள் என்கிற அளவில் இருக்கின்றன.


ஆனால் ராணுவ மற்றும் தொழில்துறை தொடர்புகள் அதிகரித்து வருகின்றன. பிப்ரவரி மாதம் ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் வெளியிட்ட செய்தியின்படி, 500 மில்லியன் யூரோ மதிப்புள்ள வெர்பா மேன் சிறிய வான் பாதுகாப்பு அமைப்புகளை இரானுக்கு வழங்க முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.


இரான் ஏற்கெனவே யாக்-130 பயிற்சி விமானங்கள், எம்ஐ-28 தாக்குதல் ஹெலிகாப்டர்களை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுள்ளது; சுகோய்-35 ரக போர் விமானங்களை இரான் எதிர்பார்த்து இருக்கிறது. வெர்பா அமைப்புகளை ரஷ்யா தற்போது வரை விநியோகம் செய்யவில்லை.


யுக்ரேன் போரில் இரானிய தயாரிப்புகளான ஷாஹெட் டிரோன்களின் பயன்பாடு ரஷ்ய படைகளின் உத்திகளை கணிசமாக மாற்றியது. ஆனால் கடந்த ஆண்டு, ரஷ்யா தனது சொந்த டிரோன் தயாரிப்புகளை விரிவுபடுத்தி இரானிய ஆயுதங்கள் மீதான சார்பைக் குறைத்துவிட்டது.


ரஷ்யாவைப் பொருத்தவரை, இரான் வீழ்ந்துவிட அனுமதிக்க முடியாத அளவிற்கு முக்கியமானது, அதே ளையில் சண்டையிடுகிற அளவுக்கு முக்கியமானது இல்லை. இந்த கணக்கும் மாறலாம். ஆனால் இப்போதைக்கு ரஷ்யாவின் தலையீடு என்பது வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிட்டது.


இரானின் பொருளாதார உயிர்நாடி

இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியும் முக்கியமான எரிபொருள் வாடிக்கையாளரும் சீனா தான்.

காமனெயி கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்துள்ள சீனா, ஆட்சி மாற்றம் என்கிற அமெரிக்காவின் உத்தியை வரலாற்று ரீதியாகவே எதிர்த்துள்ளது.


சீனா-இரான் உறவின் அடிநாதமாக இருப்பது பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடிய பொருளாதார கூட்டணி என்கிறார் பிபிசி உலக சேவையின் குளோபல் சீனா பிரிவைச் சேர்ந்த ஷான் யுவான். இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியும் முக்கியமான எரிபொருள் வாடிக்கையாளரும் சீனா தான்.


இரானைத் தண்டிக்கும் அமெரிக்க பொருளாதார தடைகள் பல்லாண்டுகளாக அமலில் இருந்தாலும் இரானின் பொருளாதார உயிர்நாடியாக சீனா இருந்து வருகிறது. இரானின் எண்ணெயை தள்ளுபடி விலையில் சீனா வாங்கி வருகிறது. எண்ணெய் போக்குவரத்துக்கான பொருளாதார தடைகளை தவிர்ப்பதற்காக போலியாக பதிவு செய்யப்படும் கப்பல்கள், 'பேய் கப்பல்கள்' என அழைக்கப்படுகிறது. அத்தகைய "பேய் கப்பல்களின் (கோஸ்ட் ஃப்ளீட்ஸ்" வலைப்பின்னல் மூலமே இரான் எண்ணெயை சீனா பெறுகிறது.


உதாரணமாக 2025-இல் இரான் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்த எண்ணெயில் 80 சதவிகிதத்துக்கும் மேல் சீனா வாங்கியுள்ளது. சீன கொள்முதல்களில் கிடைத்த வருவாய், இரான் தனது பொருளாதாரத்தை நிலைப்படுத்த உதவியதோடு மேற்கத்திய சந்தைகள் அதற்கு மூடப்பட்ட நிலையில் அதன் பாதுகாப்பு செலவுகளுக்கு நிதியளிக்கவும் உதவியுள்ளது.


2021-இல் கையெழுத்திடப்பட்ட 25 ஆண்டு உத்திசார் ஒப்பந்தம் இந்த உறவை நிலைப்படுத்தி இரானிய உள்கட்டமைப்பு மற்றும் தொலைதொடர்பு அமைப்புகளில் பில்லியன்கணக்கான சீன முதலீடுகளை உறுதி செய்கிறது.


சீனாவின் நீண்டகால கணக்கு

வரலாற்று ரீதியாகவே இரான்-இஸ்ரேல் மற்றும் இரான்-அமெரிக்க பதற்றங்களில் சீனா உத்தி ரீதியில் பாதுகாப்பான அணுகுமுறையை கடைபிடித்து வந்துள்ளது.


2025-இல் நிகழ்ந்த 12 நாள் போர் உட்பட முந்தைய மோதல்களின் போது, "வெளிப்புற தலையீடு" மீது பழிசுமத்திய சீனா "கட்டுப்பாட்டை" கடைபிடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கூறி வந்தது. சீனாவின் விமர்சனம் அமெரிக்க கொள்கையைத் தான் குறிப்பிடுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இரான் - இஸ்ரேல் இடையேயான முந்தைய மோதல்களின்போது இரானுக்கான ராஜாங்க கேடயமான சீனா செயல்பட்டுள்ளது. ஐ.நா தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்ய அதன் வீட்டோ அதிகாரங்களைப் பயன்படுத்துவது அல்லது பயன்படுத்துவதாக அச்சுறுத்துவது போன்ற செயல்களைச் செய்துள்ளது. எனினும் சீனா எப்போதும் நேரடி ராணுவ தலையீட்டை செய்ததில்லை.


அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கிலேயே நீடித்திருக்க வேண்டும், அதேநேரத்தில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுக்கக் கூடிய, ஒட்டுமொத்த பிராந்திய சரிவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே சீனாவின் உத்தியாக இருக்கிறது என்று பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.


சாகரகன்யா, விசாகப்பட்டினம், பாம்புகளால் தொழிலாளர்கள் அச்சம்

படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேற்கு உலகுக்கு ஆதரவான ஆட்சி இரானில் அமைவது சீனாவுக்கு அழிவுகரமான புவிசார் தோல்வியாக அமையும். ஏனெனில் இரான் எண்ணெய் மட்டும் வழங்காமல் இந்தப் பிராந்தியத்தில் அரசியல் ரீதியாகவே அமெரிக்காவுக்கு வலுவான எதிர்வினையாகவும் உள்ளது.


பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பினராக இரான் உள்ளது. அதோடு மத்திய ஆசியா, காகசஸ் மற்று மத்திய கிழக்கை இணைக்கும் முக்கிய புவிசார் இணைப்பாகவும் உள்ளது.


இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சி என்பது ரஷ்யாவும் சீனாவும் வலுப்படுத்த முயற்சித்து வரும் கூட்டுச் செயல்முறை மீதான நம்பகத்தன்மையை வலுவிழக்கச் செய்யும்.


இரான் மீது அமெரிக்கா-இஸ்ரேலின் முழுமையாக படையெடுப்பு நடக்காவிட்டால் இரானின் அரசியல் மற்றும் ராணுவ கட்டமைப்புகள் இருக்கவே செய்யும்.


இரானின் தலைவராக காமனெயி இடத்தை யார் நிரப்பப் போகிறாரோ அவரிடம் நல்லுறவை பேணும் தனது வழக்கமான நீண்டகால கணக்கை சீனா மேற்கொள்கிறது. ரஷ்யாவும் தனக்கான வாய்ப்புகளைத் தேடும்.