நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நவ்ஷாத் முஸ்தபா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் குழுவினர் இன்று (08) சம்மாந்துறையில் இயங்கும் இரண்டு அரபுக் கல்வி நிறுவனங்களில் விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
இதன்படி, தப்லீகுள் இஸ்லாம் ஆண்கள் அரபிக் கலாசாலை மற்றும் திராசதுல் பெண்கள் அரபிக் கலாசாலை ஆகியவற்றில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விஜயத்தின் போது, குறித்த கல்வி நிறுவனங்களின் பொதுவான சுகாதார நிலைமைகள், சமையலறை மற்றும் உணவுக் கூடங்களின் தூய்மை, கழிப்பறை வசதிகள் மற்றும் சுத்திகரிப்பு நிலை, உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்ட சில குறைபாடுகளை சரிசெய்வது தொடர்பில், குறித்த கலாசாலைகளின் நிர்வாகத்தினரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அழைத்து கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன்போது, சுகாதாரத் தரநிலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்தினருடன் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான கல்விச் சூழலை உருவாக்குவதே இவ்வாறான சுகாதார பரிசோதனைகளின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment