டெங்கு நோய் பரவலால் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஐ.டி.எச்., ராகம, களுபோவில ஆகிய வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 11,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்த நிலைமை வைத்தியசாலைகளுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ள அதேவேளை, முன்னிலை வைத்தியசாலைகளுக்கும் இது பெரும் சவாலாக மாறியுள்ளது.
டெங்கு நோயினால் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஐடிஎச், ராகம, களுபோவில ஆகிய வைத்தியசாலைகளில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக அரசாங்கத்துக்கும் பாரிய நட்டம் ஏற்படும். டெங்கு நோயாளர் ஒருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் அவர்களை பராமரிப்பதற்கு அரசாங்கத்தினூடாக அதிக நிதி செலவிட வேண்டும். அதன் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளவே நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.
இந்தப் பின்னணியில் நேற்றிலிருந்து (15) எதிர்வரும் 20ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
இதேவேளை, நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 41,466 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் கண்டுள்ளதுடன் 24 வரையிலான மரணங்கள் பதிவாகியுள்ளன.
அவர்களில் நால்வர் பாடசாலை மாணவர்கள் என்று கூறப்படுகின்றது. 89க்கும் அதிகமான வைத்திய அதிகாரிகள் பிரிவுகளுக்கு டெங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment
Post a Comment