" 30 வருட சட்டப்போராட்டம் இறுதியில் வென்ற நடிகை சுகன்யா"



1996 ஏப்ரல் 17ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பான நேருக்குநேர் நிகழ்ச்சியில், நக்கீரன் கோபால் வீரப்பனை சந்தித்து எடுத்த பேட்டி ஒளிபரப்பப்பட்டது.


அந்த பேட்டியில், முன்னாள் பிரதமர் ஒருவரின் மகனுடன் நடிகை சுகன்யாவுக்கு தவறான தொடர்பு இருந்ததாக வீரப்பன் பேசியிருந்தார். 


இந்த விஷயம் அப்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, "இது முழுக்க முழுக்க பொய்யான அவதூறு" என்று கூறி நடிகை சுகன்யா நீதிமன்றத்தை நாடினார்.


 அந்த பேட்டியால் தனது நற்பெயர் பாதிக்கப்பட்டதோடு, சினிமா வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டதாகவும், மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் கூறி ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டிருந்தார்.


வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம், சுகன்யாவுக்கு ரூ.10,00,500 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து சன் டிவி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.


 "நக்கீரன் கொடுத்த பேட்டியை அப்படியே ஒளிபரப்பினோம். வீரப்பன் சொன்ன கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்று சன் டிவி தரப்பில் வாதிடப்பட்டது.


ஆனா, அந்த பேட்டியை எடிட் பண்ண முழு அதிகாரமும் சன் டிவிக்கே இருந்தது. அதுமட்டுமில்லாமல், ஒளிபரப்புக்கு முன்னாடி குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவோ, சுகன்யாவிடம் விளக்கம் கேட்கவோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


அதனால், "நாங்கள் பொறுப்பல்லன்னு சொல்லி சன் டிவி தப்பிக்க முடியாது" என்று கூறிய நீதிபதி, கீழமை நீதிமன்றம் விதித்த ரூ.10 லட்சம் இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மேலும், அந்த அவதூறான பகுதியை இனிமேல் எந்த சூழலிலும் ஒளிபரப்பக் கூடாது என்ற நிரந்தர தடையும் தொடரும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


1996இல் தொடங்கிய இந்த வழக்கில், கிட்டத்தட்ட 30 வருட சட்டப் போராட்டத்துக்கு பிறகு நடிகை சுகன்யாவுக்கு தற்போது சாதகமான தீர்ப்பு கிடைத்திருக்கிறது. 


முப்பது வருடங்களின் பின்னும் நீதி நின்று நிலைத்த தருணமாக இதைப் பார்க்கலாம்.