இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் உள்ள புளோரஸ் கடல் பகுதியில், உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தின் அதிர்வால் வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து தரைமட்டமாகியுள்ளன.
சிக்கா, மங்கராய் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் இதுவரை 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 101 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
நிலச்சரிவுகளால் 900-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தும் சாலைகள் துண்டிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்த நிலையில், நிலநடுக்கத்தால் சுமார் 5,000 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு அரசு உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு தற்போது அதை மீள பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் 700 கி.மீ நீளமுள்ள முக்கிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புக்குழுவினர் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுவதால் இந்தோனேசியாவில் பெரும் சோகம் நிலவுகிறது.
.webp)

Post a Comment
Post a Comment