மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!




 மகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முற்பட்ட இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இன்று (08) மதியம் பேஸ்லைன் வீதி மகசின் சிறைச்சாலை பக்கச் சுவர் அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்கள் குறித்த இடத்தில் இருந்து சிறைச்சாலைக்குள் 2 பொதிகளையும் வீச முற்பட்டவேளை சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர்கள் வசமிருந்த 2 பொதிகளையும் பரிசோதனை செய்த போது, 22 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஆஷ் (Ash) போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள்,10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய கையடக்கத் தொலைபேசிகள் என்பவை பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், பொரளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.