மாணவத் தலைமைத்துவத்தின் அவசியம்



 


அம்பாறை மாவட்ட மாநாட்டில் சம்மாந்துறை மாணவியின் அசத்தல் உரை! மாணவத் தலைமைத்துவத்தின் அவசியம் குறித்து மின்மினி மின்ஹா பேச்சு! 


✍ சம்மாந்துறை செய்தியாளர்


மாணவத் தூதுவர் திட்டம் எதிர்காலத்தில் பொறுப்புள்ள நல்ல குடிமக்களை உருவாக்கும் நீண்டகால முதலீடாக அமைய வேண்டுமென, சம்மாந்துறை அல்-அர்சத் மகா வித்தியாலயத்தின் தரம் 10 மாணவத் தூதுவரும் இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான மின்மினி மின்ஹா வலியுறுத்தினார்.


தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (04) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட மாணவத் தூதுவர் மாநாட்டில் உரையாற்றிய ஒரே மாணவியாகப் பங்கேற்ற அவர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் இணைந்து செயற்பட்டாலேயே மாணவத் தூதுவர் திட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.


புதிய மாணவர் தலைவர்கள் பொறுப்புகளை ஏற்கும்போது திட்டங்கள் குறித்த தெளிவின்மை, பொறுப்புணர்வு பற்றாக்குறை மற்றும் மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்ற சவால்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஒழுக்க விழுமியங்களை வலுப்படுத்த ஆசிரியர்களின் தொடர்ச்சியான வழிகாட்டல் அவசியம் என்றும் தெரிவித்தார்.


மேலும், தேசிய வேலைத்திட்டத்தின் இலக்குகளை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான, ஒழுக்கமிக்க மற்றும் மாணவர் நட்பு பாடசாலைச் சூழலை உருவாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.


நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ். ஜெயராஜன், ஜனாபா பானு ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், அம்பாறை மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திருமதி தாயாணி கமக்கே கௌரவ அதிதியாகவும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் டாக்டர் ஐ.எல்.எம். ரிபாஸ் உள்ளிட்டோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.


அம்பாறை மாவட்டத்தின் 102 தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைமைத் தூதுவர்கள் மாநாட்டில் பங்கேற்று, தலைமைத்துவம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றுக்கொண்டனர்.


👉 Kalmunai Hub Channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vb6agz1EquiTGXXbek42


(குறிப்பு : "இது ஒரு வாட்ஸ்அப் சேனல் என்பதால் உங்கள் தொலைபேசி எண் முற்றிலும் பாதுகாப்பானது. குழுவின் அட்மின் உட்பட வேறு எவராலும் உங்கள் விபரங்களைப் பார்க்க முடியாது.")