மாளிகைக்காடு வர்த்தகர்களின் “சீட்டு ஒன்றுகூடல்”: வணிக நட்பை வலுப்படுத்தும் விசேட நிகழ்வு



 


பாறுக் ஷிஹான்


லங்கா டிரேட் எண்டர்பிரைசஸ் (Lanka Trade Enterprises) நிறுவனத்தின் உரிமையாளரும் பணிப்பாளருமான எம்.ஏ.ஹைருல் அமான் அவர்களின் தலைமையில், "வணிக நட்பை வலுப்படுத்தும் ஓர் சந்திப்பு" எனும் கருப்பொருளின்கீழ் சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர்களின் "சீட்டு ஒன்றுகூடல்" (Seetu Get Together) நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (25) அட்டப்பளம் - நிந்தவூரில் அமைந்துள்ள 'அடாஸ் ரிசோர்ட்' (Atas Resort) மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பமான இந்நிகழ்வில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவரும் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவருமான எம்.எஸ்.எம். முபாறக், வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.எல். முஹம்மட், பொருளாளர் எம்.எம்.ஏ. றஹீம் உள்ளிட்ட சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர்கள் பலரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

 
நிகழ்வின் ஆரம்பத்தில் வருகை தந்த வர்த்தகர்கள் அனைவருக்கும் 'சன்ரைஸ் கேட்டரிங்' நிறுவனத்தின் தயாரிப்பில் சுவையான மதியப் போஷன விருந்து உபசரிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வர்த்தகர்களுக்கிடையிலான வணிக நட்பையும் மகிழ்வையும் இரட்டிப்பாக்கும் வகையில் பல்வேறு களிப்பூட்டும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் குறிப்பாக 'யானைக்குக் கண் வைக்கும் போட்டி' மிகவும் சுவாரசியமாக அமைந்ததோடு, வயது வித்தியாசமின்றி அனைத்து வர்த்தகர்களும் சிறுவர்களைப் போல் ஆர்வத்துடன் பங்கேற்றமை நிகழ்விற்கு மேலும் மிளிர சேர்த்தது.

 
போட்டிகளில் வெற்றி பெற்ற வர்த்தகர்களுக்கும், இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து வர்த்தகப் பிரமுகர்களுக்கும் 'லங்கா டிரேட் எண்டர்பிரைசஸ்' நிறுவனத்தின் சார்பில் பெறுமதியான பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதியாக மாலை நேரத் தேநீர் மற்றும் சிற்றூண்டி உபசரிப்புடன் வர்த்தகர்களின் இச் சினேகபூர்வ ஒன்றுகூடல் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.