கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு : நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு



கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு : நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு



நூருல் ஹுதா உமர்


கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த வழக்கு, இன்று (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதவான் செல்வி அ. தர்ஷினி முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ. அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவர் மிப்ளால் மௌலவி, ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக், ஓய்வுபெற்ற கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், தொழிலதிபர் எம்.எச்.எம். இப்ராஹிம் ஆகிய பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா,சாரிக் காரியப்பர், ஆரிகா காரியப்பர், எம். வை. அன்வர் சியாத், துல்ஹர் நயீன் துல்சன், ஏ.எல்.எம். றிபாஸ் ஆகியோருடன் சட்டத்தரணிகளான சிபான் மஹரூப், பீ.எம். றஸீன், எம்.ஏ. அன்சில், எம்.மனாப், எம். முஹம்மட் நப்ஸர் மற்றும் எம். முஹம்மட் முபின், கௌசல்யா நரேந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.


சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள், நிகல்நிலை காப்புச்சட்டத்தின் கீழ் இவ்வழக்கினை விசாரிப்பதற்கான மன்றின் நியாயாதிக்கம் தொடர்பிலான ஆட்சேபனைகளை முன்வைத்ததுடன் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பிரதிவாதிகள் சார்பில் எழுத்துமூல ஆட்சேபனைகளை முன்வைத்தனர். மேலும் இரு பிரதிவாதிகள் எழுத்துமூல ஆட்சேபனைகளை முன்வைக்கவும், வாதங்களை முன்வைக்கவும் குறித்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு வழக்கு நடைபெறவுள்ளது.


ஐந்தாம் பிரதிவாதி ஏ.எல்.எம். முக்தார் அவர்களின் முகப்புத்தகத்தில் வழக்காளி தொடர்பிலான விடயங்கள் இல்லாமலிருப்பதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 


வழக்காளி டாக்டர் கு. சுகுணன் மன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பதுடன் அவர் சார்பில் சட்டத்தரணி  ஆஜராகி வழக்காளி தொடர்பிலான வாதங்களை முன்வைத்தார்.