நாம் விடுதலையையே கேட்கின்றோம். விசாரணையைக் கேட்கவில்லை. எமது வழக்குகளை விசாரணை செய்வதற்காக விசேட நீதிமன்றம் நிறுவப்படுவதை எதிர்க்கின்றோம். இவ்வாறு தமிழ் அரசியல் கைதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவுகள் ஊடாக விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர். அதில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கான அமைக்கப்படும் விசேட மேல் நீதிமன்றம் எதிர்வரும் 12ம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையிலேயே, மேற்படி விசேட நீதிமன்றம் அமைக்கப்படுவதைத் தமிழ் அரசியல் கைதிகள் எதிர்த்துள்ளனர்.
கடந்த காலங்களில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுத்தபோது, எம்மை விடுவிக்க வேண்டும் என்பதையே கோரிக்கையாக முன்வைத்திருந்தோம். மீண்டும் விசாரணை, இழுத்தடிப்பு என்பதை விரும்பவில்லை.
இதனாலேயே எம்மைப் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறும் அல்லது புனர்வாழ்வு வழங்கி விடுவிக்குமாறும் கோரியிருந்தோம்.
ஆனால், தற்போது ஒரு தொகுதி கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டு, ஒரு தொகுதி கைதிகள் புனர்வாழ்வுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் விசேட நீதிமன்றம் அமைக்கும் செயற்பாட்டை அரசு முன்னெடுத்துள்ளது. இதனை நாம் எதிர்க்கின்றோம்.
விசாரணையை நாம் வலியுறுத்தவில்லை. விடுதலையையே கேட்கின்றோம். உண்ணாவிரதப் போராட்டத்தில் நாம் ஈடுபட்டிருந்த போது வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றுள்ளது.
