தமிழ் மக்களை தீவிரவாதிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாமென அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வாய்மூல கேள்வி நேரத்தில் எட்டு புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும பாதுகாப்பு அமைச்சரிடம் எழுப்பிய கேள்வி ஒன்று குறுக்கிட்டு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளுக்கு அமையவே புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயத்தை இனவாத கோணத்தில் பார்க்கக்கூடாது எனவும், தமிழர்கள் அனைவரும், பயங்கரவாதிகள் அல்லவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை பயங்கரவாதிகள் எனவும், தமிழ் அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாகவுமே கடந்த அரசாங்கம் அடையாளப்படுத்தியதாகவும், எனினும் புதிய அரசாங்கம் இந்த பிரச்சினையை வேறு கோணத்தில் அனுகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்கும் விடயம் தொடர்பிலான தீர்மானத்தை வெளிவிவகார அமைச்சர் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதியே உலகிற்கு அறிவித்ததாகவும், எனினும் தடை நீக்கம் தொடர்பிலான தீர்மானம் நவம்பர் மாதம் எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறெனின் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 32 நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்த தடையை நீக்குவது தொடர்பிலான தீர்மானத்தை எடுத்த தினம் குறித்து சர்ச்சை தொடர்பில் விளக்கமளிக்குமாறு டளஸ் அழகப்பெரும மற்றுமொரு கேள்வியை எழுப்பினார்.
சர்வதேச பொலிஸாார் மற்றும் புலனாய்வு பிரிவுகளுடன் பேச்சு நடத்திய பின்னரே தடைநீக்கம் செய்யும் தீர்மானத்திற்கு அரசாங்கம் வந்ததாகவும், இந்த விடயத்தில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை எனவும் லக்ஸ்மன் கிரியெல்ல இந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் குறிப்பிட்டார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்களை வடக்கிற்கு செல்வதற்கு அனுமதிக்கவில்லை எனவும், பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்திக்க வந்த வந்தவர்கள்கூட திரும்பிச் செல்லும்நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்,
எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவொரு புதிய ஆரம்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த கேள்விக்கு பதில் அளித்த பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை நீக்கம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் பாதுகாப்புச் செயலாளர், அந்த ஆணைக்குழுவின் தலைவராக வெளிவிவகார அமைச்சர் செயற்படுவதாகவும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இராணுவ புலனாய்வாளர்கள், அரச புலனாய்வு பிரிவினர், நீதி திணைக்களம், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இதில் உள்ளடங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து குறித்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பில் எடுத்த தீர்மானத்திற்கு பின்னரே தடை நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தடை நீக்கம் செய்யப்பட்ட 264 தனிநபர்கள் மற்றும் எட்டு அமைப்புகள் தங்கள் மீதான தடையை நீக்குமாறு உத்தியோகபூர்மாக வேண்டுகோள் விடுத்தார்களா? எனவும், ஸ்ரீலங்காவில் அமைக்கப்பட்டுள்ளது போன்று அந்தந்த நாடுகளில் குறித்த அமைப்புகள் மீதான தடை நீக்கம் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா? எனவும், குறித்த அமைப்புகள் தமிழீழ கோரிக்கை மற்றும் பிரிவினைவாதத்தை கைவிட்டுவிட்டதாக எந்த சந்தர்ப்பத்திலாவது உறுதியளித்தனரா? எனவும் டளஸ் அழகப்பெரும மேலும் மூன்று கேள்விகைள எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ருவன் விஜேவர்தன, தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பிலான பட்டியலை ஆராய்ந்த குறித்த ஆணைக்குழு, கடந்த மூன்று வருடங்களில் தீவிரவாத செயற்பாடுகளுக்காக அமைப்பு ரீதியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டமை, தீவிர செயற்பாடுகளுடன் தொடர்புபட்டமை மற்றும் தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்கியமை தொடர்பில் ஆராய்ந்து பெறப்பட்ட அறிக்கைகளுக்கு அமையவே தடை நீக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
15 total vie
