சென்னையில் மீண்டும் மழை: மீட்பு, நிவாரண பணிகள் பாதிப்பு



சென்னையில் மீண்டும் மழை: மீட்பு, நிவாரண பணிகள் பாதிப்பு

சென்னையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. 



தீபாவளி பண்டிகையில் இருந்தே விட்டு விட்டு பெய்து வரும் மழை அடுத்தடுத்த இடைவெளிகளில் 4 நாட்கள் கனமழையாக பெய்தது. 

குறிப்பாக கடந்த 1–ம் திகதி ஒரே நாளில் சென்னை மற்றும் தாம்பரம் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் பெய்த கடும் மழையால் மாநகரில் ஒரு சில இடங்களை தவிர்த்து அனைத்து பகுதிகளுமே வெள்ளத்தில் மூழ்கியது. 

அன்று பெய்த மழையில் அடையாறு ஆற்றங்கரை யோரமாக வசித்து வந்தவர்கள் தாங்க முடியாத இழப்பை சந்தித்தனர். 

சைதாப்பேட்டை, ஜாபகர்கான்பேட்டை பாலங் களில் காட்டாற்று வெள்ளம் போல செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் பாய்ந்தோடியது. 

இதனால் சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், தி.நகர், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, நெசப்பாக்கம், கே.கே.நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. 

இதேபோல வடசென்னை, மத்திய சென்னை பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. ஜெ.ஜெ.நகர், முகப்பேர், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், புளியந்தோப்பு, வியாசர்பாடி வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது. 

வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் வீடு களை மூழ் கடிக்கும் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால் இலட்சக்கணக்கானோர் வீடு களை காலி செய்து விட்டு நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். 

கடந்த 29ம் திகதி பெய்த கனமழைக்கு பின்னர் அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருந்தாலும், அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பல்வேறு இடங்களில் சாலைகளில் தேங்கிய வெள்ளம் வடிந்தது. தண்டவாளங்களில் தேங்கி நின்ற மழை நீரும் வற்றியது. 

இதனால் பஸ்–ரயில் போக்குவரத்து சீரானது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரளவுக்கு இயல்பு நிலை திரும்பியது. இருப்பினும் பல பகுதிகளில் தண்ணீர் இன்னும் வடியாமலேயே தேங்கி இருப்பதால் 2 வாரங்களுக்கும் மேலாக மின்தடையும் நீடிக்கிறது. 

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக்கு அருகே தமிழக கடலோர பகுதியில் மையம் கொண்டிருந்தது. இது அதே பகுதியில் நீடிப்பதால் 3 நாட்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இருப்பினும் பெரிய அளவில் மழை பெய்யாததால் மக்கள் கொஞ்சம் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். படிப்படியாக மழை குறைந்து விடும் என்றே அவர்கள் எதிர்பார்த்தனர். 

இந்நிலையில் சென்னை மக்களை அச்சுறுத்தும் வகையில் இன்று காலையில் மீண்டும் கனமழை கொட்டியது. 

கொடுங்கையூர், மாதவரம், ஆவடி, முகப்பேர், அம்பத்தூர், பட்டாபிராம் கீழ்பாக்கம், புரசைவாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், சென்னை புறநகர் பகுதி களிலும் இன்று காலையில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. 

இதன் காரணமாக வெள்ளம் வடிந்திருந்த பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக மாறி வருகிறது. 

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது. 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வினியோகித்து வருகிறார்கள். இராணுவத்தினரும், மீட்பு குழுவினரும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இன்று பெய்த கன மழையால் இந்த நிவாரண பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இருப்பினும் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் செயல்பட்டு வருகிறார்கள். 

(மாலை மலர்)