குழாய் நீர் தொடர்ந்தும் வரும்.கவலையை விடுங்கள்!



தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவர்கள் கோரிய மேலதிக கொடுப்பனவை முழுமையாக வழங்குவதற்கு நீர் வழங்கல் சபை தீர்மானித்ததை அடுத்து பணிபகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் கோரிய 37,500 ரூபா மேலதிக கொடுப்பனவில் 25,000 ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 12,500 ரூபாவை இன்றைய தினத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் மஹிலால் சில்வா கூறுகின்றார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சிறந்த பதில் அளிக்கப்பட்டமையால், தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததாக நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்தார்.
மேலதிக கொடுப்பனவிற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.