'சரீஆ' சட்டம்: சுமந்திரனின் பேச்சால் ஆட்சேபனை







அமைச்சர் ரிஷாட், மரிக்கார், நவவி, இஷாக் எழுந்து நின்று ஆட்சேபனை
'சரீஆ' சட்டம் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் உரைக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் சபையில் கடும் வாக்குவாதம் இடம் பெற்றதோடு சுமந்திரன் எம்.பிக்கு உரையாற்றவிடாமல் முஸ்லிம் எம்பிக்கள் வாதத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் நேற்று இடம்பெற்றது. விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் எம்பி சவூதி அரேபியாவில் இலங்கை பெண் ஒருவர் கல்லால் அடித்துக் கொலைசெய்யப்பட இருப்பது குறித்து உரையாற்றினார்.
இஸ்லாமிய சரீஆ சட்டத்தை தொடர்புபடுத்தி அவர் உரையாற்றியதையடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன், எம்.மரிக்கார், நவவி, இஷாக் ரஹ்மான் ஆகியோர் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று தமது ஆட்சேபனையை வெளியிட்டனர்.
கல்லடித்துக் கொல்லப்பட இருக்கும் பெண்ணை பாதுகாக்க பாராளுமன்றத்தில் உள்ள 22 முஸ்லிம் உறுப்பினர்களும் போராடத் தயாராக உள்ளனர். ஆனால் சரீஆ சட்டத்தை விமர்சிப்பதற்கு இடமளிக்க முடியாது. சரீஆ சட்டத்தின் பிரகாரம் தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியும். ஆனால் எம்மை நோகடிக்கும் வகையில் பேசக் கூடாது என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய எம்.மரிக்கார் எம்பி இஸ்லாத்திற் குட்பட்ட விடயங்களை விமர்சிக்கக் கூடாது. நான் மரண தண்டனைக்கு எதிரானவன். மத்திய கிழக்கிற்கு அடிமைத் தொழிலுக்கு செல்வதை நான் கண்டிக்கிறேன். கொல்லப்பட இருக்கும் பெண்ணைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
கடந்த கால இனவாதம் காரணமாகவே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ஒரு மதத்தை விமர்சிப்ப தாலேயே எதிர்க்கிறேன் என்றார். சுமந்திரன் எம்பி உரையாற்றும்போது, சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்¦ பண்ணாகப் பணியாற்றச் சென்ற அப்பாவி இளம் பெண் ஒருவரை அந்நாட்டுச் சட்டத்தின் படி கல்லடித்துக் கொல்வதற்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ரிசானா நபீக் அந்நாட்டு சட்டத்துக்கு அமைய மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் இன்னுமொரு இலங்கைப் பெண் கொல்லப்படவுள்ளார்.
இலங்கையின் மனித உரிமை தொடர்பில் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்பும் நிலையில், சவூதியின் இவ்வாறான நடவடிக்கை தொடர்பில் ஏன் சர்வதேச நாடுகளோ நாமோ கேள்வியெழுப்பாமல் இருக்கிறோம். சரீஆ சட்டத்தின் கீழ் சவூதியில் தண்டனை வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் தண்டனைக்கு எதிராக நாம் கேள்வியெழுப்புகிறோம்.
உலகமயப்படுத்தப்பட்ட நாடுகள் பலவற்றில் மோசமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இருந்தபோதும், இவ்வாறான தண்டனைகள் தொடர்பில் விமர்சனங்களும் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் மோசமான தண்டனைகளை வழங்கும் சவூதியுடன் இராஜதந்திர உறவுகளை நாம் இடைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சுமந்திரன் எம்பியின் உரையின் தவறான விடயங்கள் இருந்தால் நீக்குவதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார். இருந்தாலும் சுமந்திரின் எம்பியின் உரைக்கு முஸ்லிம் எம்பிக்கள் இடையூறு செய்தனர்.
நன்றி (தினகரன்)