
தோனிக்கு பிணையில் வெளிவர முடியாப் பிடியாணை பிறப்பித்துள்ளது ஆந்திர நீதிமன்றம்
இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச நீதிமன்றம் ஒன்று தோனிக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான பிசினஸ் மாத இதழ் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் தோனியை விஷ்ணு போல சித்தரித்து அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
தோனிக்கு பல கைகள் இருப்பது போலவும் ஒவ்வொரு கையிலும் ஒரு வியாபாரப் பொருளை வைத்திருப்பது போலவும் அட்டைப் படம் இருந்தது.
இதில் ஷூ ஒன்றும் இடம்பெற்றிருந்தது. ‘God of Big Deals’ என்று கட்டுரைக்குத் தலைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரம் இந்துக் கடவுளை அவமதிப்பது போல இருக்கிறது என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ராஜிந்தர் சிங் ராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக ஆந்திராவிலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி ஆந்திராவில் உள்ள அனந்தபூர் நீதிமன்றத்தில் தோனி நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அவருக்கு பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
