கிழக்கு மற்றும் மேல் மாகாணங்கள் வெள்ளக்காடாகியது





கிழக்கு மற்றும் மேல் மாகாணங்கள் வெள்ளக்காடாகியது. மட்டக்களப்பில் நேற்றிலிருந்து பெய்து வரும் அடை மழை காரணமாக நாவலடி, செங்கல்லடி, ஏறாவுா்,மட்டக்களப்பு, காத்தான்குடி போன்ற பிரதேசங்கள் நீரில் முழ்கியுள்ளன.

இதேவேளை, இன்று மாலை 3மணி முதல் 7 மணிவரை பெய்த அடை மழையினால், கொழும்பிலும் அக்கரைப்பற்றிலும்  வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாளை ஆரம்பமாகவிருந்த 2016ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டுக்கான கல்வி நடவடிக்ககைகள்  நாளை அக்கரைப்பற்று அஸ்ஸிராஐ் மகாவித்தியாலத்தில் ஆரம்பமகாது என அதிபர் அறிவித்துள்ளார்.மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெய்துவரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணித்தியாலங்களில் 58.8 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

இந்நிலையில், இருதயபுரம், மாமாங்கம், திஸவீரசிங்கம் சதுக்கம், ஊறணி உள்ளிட்ட தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

அம்பாறை – அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை,பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை,காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்பு வீடுகள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அநேகமான உள்வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், உள்ளூர்ப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளிலும் வாய்க்கால்களிலும் நீர் பெருக்கெடுத்துள்ளன.

கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதினால் மீனவர்களில் பலர் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இதனால் கடற்றொழில் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பாலமுனை மீனவர் சங்கத் தலைவர் ஏ.எம்.எம்.நைய்ம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்க்குளம், பரவிப்பாஞ்சான் குளம், கல்மெட்டியாவ குளம், வான்எல குளம்,அக்போபுர குளங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக கந்தளாய்க்குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கடந்த திங்கட்கிழமை முதல் அரை அடிக்கு பத்து வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

இந்த மழை காரணமாக பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.