விவாரகரத்துக்கள் அதிகரிக்க மஹிந்தவே காரணம்



(T.Kannan)
நாட்டில் விவாகரத்துக்கள் அதிகரித்திருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவே காரணமென ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் போக்குக் காரணமாக குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டமையால் பல குடும்பங்கள் சீரழிந்திருப்பதாகவும், இதனால் பலர் விவாகரத்துக் கோரி நீதிமன்றம் சென்றிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விவகாரத்து வழக்குகள் அதிகரிப்பதற்கு மஹிந்த ராஜபக்சவின் நிர்வாகமே காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் 95 வீதத்திற்கும் அதிகமான வழக்குகள் விவகாரத்துக் கோரிய வழக்குகள் எனவும், குடும்ப பொருாதார நிலைமையே இதற்கு பிரதான காரணமெனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்காவில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடையும் நிலையில் கம்மன்பில கறுப்புக் கொடியை ஏற்றுமாறு கூறுவதாகவும், எனினும் நாடு முழுவதிலும் தேசியக் கொடியையே ஏற்றப்போவதாகவும் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்த்துவிட முடியும் என சிலர் கனவு காண்பதாகவும், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தை எவராலும் அசைக்க முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.