நாடு திரும்புகிறார் ஹக்கீம்



புறநலத் தூய்மையாக்கம் தொடர்பான தெற்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பங்களாதேஷ் சென்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று நாடு திரும்புகிறார்.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற புறநலத் தூய்மையாக்கம் தொடர்பான தெற்காசிய மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஹக்கீம் கலந்துக் கொண்டிருந்தார்.

குறித்த மாநாட்டின் போது சுத்தமான தண்ணீரின் பயன்பாடு மற்றும் புறத்தூய்மை நடவடிக்கைகளின் தேவை என்பன தொடர்பில் சார்க் நாடுகள் எதிர்நோக்கும் சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுப்பது பற்றி முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த மாநாட்டில் பங்காளதேஷ், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பூட்டான், இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய சார்க் நாடுகளைச் சேர்ந்த 500இற்கும் அதிகமான பிரதிநிதிகள் கலந்துக் கொண்டிருந்தனர்.

அங்கு சிறப்புரை ஆற்றிய அமைச்சர், அமைச்சர்கள் மட்ட கலந்துரையாடலொன்றிலும் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மாநாடு கடந்த 2003ஆம் ஆண்டு முதல் சுழற்சி முறையில் தெற்காசிய நாடுகளில் நடைபெற்று வருகின்ற அதேவேளை, 2011ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.