அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுவிக்க மன்னிக்கப்பட்டவர் கோரிக்கை





இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தது போல, மற்றைய தமிழ்க் கைதிகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தான் கோருவதாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய சிவராஜா ஜெனிபன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தக் காலப்பகுதியில், அவரை கொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த ஜெனிபனுக்கு, ஜனாதிபதி தான் பதவியேற்ற ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.
2006 ஆம் ஆண்டு எப்ரல் மாதம், மட்டக்களப்பில் இருந்து வவுனியா நோக்கி பேரூந்தில் பயணம் செய்தபோது, சிவிலுடையில் வந்தவர்கள் தன்னைக் கைது செய்து இவ்வளவு காலமும் சிறையில் தடுத்து வைத்திருந்தார்கள் என ஜெனீபன் கூறினார்.
கிளைமோர் குண்டை வெடிக்க வைத்து, மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக பொலநறுவை மற்றும் யாழ் மேல் நீதிமன்றங்களில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் எனினும் தான் பேரூந்திலிருந்து கைது செய்யப்பட்டபோது, தன்னிடம் கிளைமோர் குண்டு எதுவுமே இருக்கவில்லை என்றும் ஜெனிபன் கூறினார்.
தனக்கு எதிரான வழக்குகள் குறித்து விபரங்கள் எதனையும் கூற விரும்பவில்லை என தெரிவித்த ஜெனிபன், அவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டு, தன்னை விடுதலை செய்த ஜனாதிபதியின் நல்ல எண்ணத்திற்கு ஊறு விளைவித்துவிடக் கூடும் என்று அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் இந்த நல்லெண்ணச் செயற்பாடு இன்னும் தொடர வேண்டும் என்பதில் தான் அக்கறை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறை வாழ்க்கை கொடுமையானது என விபரித்துள்ள அவர், அதிலும் விசாரணைகளின்றியும், என்ன நடக்கப் போகின்றது என்று தெரியாத நிலையில், சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது மிகவும் மோசமானது எனவும் கூறியுள்ளார்.
சிறையிலுள்ள மற்றைய கைதிகளையும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் விடுதலை செய்வார்கள் என திடமாக எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.