வவுனியா, மதவுவைத்தகுளம் கிராம அலுவலருக்கு எதிராக ஆரப்பாட்டம்



வவுனியா, மதவுவைத்தகுளம் கிராம அலுவலரின் தன்னிச்சையான செயற்பாட்டைக் கண்டித்து கிராம மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.
மதவுவைத்தகுளம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மதவுவைத்தகுளம் கிராமத்திற்கு அரசினால் வழங்கப்படும் உதவித் திட்டங்களை மக்கள் கருத்துக்களை பெறாது தன்னிச்சையாக மகளிர் சங்கத் தலைவியுடன் இணைந்து கிராம அலுவலர் செயற்படுத்துவதாக தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், எமது கிராமத்திற்கு வருகின்ற அபிவிருத்தி திட்டங்களை இப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மக்களின் கருத்துக்களை அறியாது கிராம அலுவலர் செயற்படுத்துகின்றார்.

தற்போது எமது கிராமத்திற்கு குடிநீர் திட்டம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதனை எமது கிராமத்தின் பாலர் பாடசாலை கட்டத்தின் ஒரு பகுதியை உடைத்து அமைக்க கிராம அலுவலர் முனைப்பு காட்டி வருகிறார்.

ஆனால் எமக்கு பாலர் பாடசாலை வேண்டும். அதனை வேறோர் இடத்தில் அமைக்கலாம். அதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராக இருக்கின்றோம். இதனை கிராம அலுவலரிடம் தெரிவித்த போதும் அதனை அவர் கண்டு கொள்ளவில்லை.

பிரதேச செயலாளரிடம் தெரிவித்த போது அவரும் எம்மை அவமானப்படுத்தி அனுப்புகின்றார். எமது கிராம அபிவிருத்திச் சங்கத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார். கிராமத்திற்காக கதைத்தால் சங்கத்தை கலைப்பது என்றால் நாம் யாரிடம் நீதி பெறுவது என அவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆர்பர்பட்டத்தில் ஈடுபட்டவர்கள், தன்னிச்சையாக செயற்படும் கிராம அலுவலர் எமக்கு தேவையில்லை, அரசே எமக்கு நீதியைப் பெற்றுத் தா, கிராம அலுவலரின் உதவியாளராக செயற்படும் பெண்ணை உடனடியாக மாற்று என கோசங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து வைத்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் பண்டார தலைமையிலான பொலிசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக மூவரை வவுனியா அரச அதிபரை சந்தித்து பிரச்சனையை தெரியப்படுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.