லறீனா அப்துல் ஹக்கின் ' சுயமி:



சிராஜ் மசூர்.
சுயமி: 
மனதை மெல்லிறகால் வருடி, இதயத்தை அசைக்கும் இசைப்பாடல்கள்
லறீனா அப்துல் ஹக்கின் 'சுயமி' இறுவட்டிலுள்ள பாடல்களைக் கேட்டபோது, இந்தத் தலைப்பின் வரிகளே என்னுள் கிளர்ந்தன. எனக்கு அவ்வளவு இசைஞானம் கிடையாது. ஆனால் இசையை ரசிக்கும் மனசும் அதில் ஈர்ப்பும் இருக்கிறது.
ஆங்காங்கே மெலடி, ஹம்மிங், ரிதம் என பலவித இசையோடு இழைந்து பரவி மேலெழும் லறீனாவின் பாடல்களில், நமக்கு நன்கு பரிச்சயமான மெல்லிசைப் பாடல்களின் சரடுகள் பட்டுத் தெறிக்கின்றன. இதனை ஈழத்து இசை மரபுக்குள் லறீனாவின் கால்கள் பதிந்திருப்பதன் அடையாளம் என்பேன்.
இலங்கை வானொலியில் நாம் அடிக்கடி கேட்டுப் பழகிய மெல்லிசை மரபிலிருந்தே இது கிளை விட்டிருக்க வேண்டும்.ஆனால், இது மரபைப் பிரதி பண்ணும் மேலோட்டமான முயற்சியல்ல; இன்னொரு வகையில் ஒரு தொடர்ச்சி. முஸ்லிம்களது இசை மரபின் தொடர்ச்சியாகவும் நோக்கலாம்.
இந்திய செவ்வியல் இசை மரபின் ஆழ்ந்த தாக்கம் நம் எல்லோருள்ளும் இருக்கிறது. ஒரு நீண்ட தொன்மையின் வேர்களிலிருந்து அவ்வளவு இலகுவில் நம்மால் விடுபட முடியாது. லறீனாவும் அப்படித்தான்.
ஆயினும், இலங்கைக்கே உரித்தான தனித்துவங்களால் நாம் கலவை செய்யப்பட்டிருக்கிறோம். கபில பூகலாராச்சி, தர்ஷன ராஜமந்த்ரி ஆகிய இரு சிங்கள இசையமைப்பாளர்களின் இசையின் ஊடே இந்தப் பாடல்கள் இழைந்து வருகையில் ஒரு வித்தியாசம் தெரியவே செய்கிறது.
லறீனாவிற்கு இந்த ஆற்றல் எங்கிருந்து வந்தது? அவரது தாய் மாத்தளை பர்வீன் ஒரு எழுத்தாளர்; தந்தை அப்துல் ஹக் ஒரு இசையமைப்பாளர். மகளுக்கு இந்த எல்லா ஆற்றல்களும் கைகூடி வந்திருக்கிறது. அதனால்தான் கவிதை, புனைகதை, ஆய்வு, கட்டுரை, பாடல்,அரங்க அளிக்கை, இசை என்று கலையும் இலக்கியமும் கலந்த கலவையாய் -பன்முக ஆளுமையாய் அவர் மிளிர்கிறார்.
பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முது தத்துவமாணி கற்கையைத் தொடர்ந்தபோது நானும் லறீனாவும் ஒரே வகுப்பில் கற்றோம். அப்போதே அவரது ஆற்றலையும் ஆளுமையையும் அடையாளம் காண முடிந்தது. அவரை எழுதுமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க, 'திரைகளைத் தாண்டி..' என்ற மீள்பார்வை பத்தியில் தொடராக எழுதினார்.
அப்போது பார்த்த லறீனாவுக்கும் இப்போது காணும் லறீனாவுக்கும் இடையில்தான் எவ்வளவு வித்தியாசம்! அவரில் ஒரு ஆச்சரியமான வளர்ச்சியைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.
"இசைப்பாடல் ஒன்றைப் பாடினேன். கனவெல்லாம் கலைந்தே..கரைந்தே போயினவோ?" என்று தொடங்கும் பாடல், அவரது நெடுநாள் கனவின் மொழியாகி வார்த்தைகள் ஊடே வழிகிறது. இந்த இசைப்பாடல்கள் மூலம், இசைத்துறையில் லறீனா தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்திருக்கிறார்.
வெறும் பரிசோதனை முயற்சியல்ல இது. பாடல் வரிகள், மெட்டு, இசையமைப்பு, பின்னணிக்குரல் என்று எல்லாமே தாமாய் மிளிரும் லறீனாவின் இந்தப் பன்முக ஆற்றல் அற்புதமானது. மிக அபூர்வமாகவே இவையெல்லாம் ஒருங்கே கைகூடும்.
"இறக்கைகள் எனக்கில்லை, மனமுண்டு தோழா! தடைகளைத் தாண்டி நாம் பறப்போம்", "காற்றுக்கு இல்லை வேலியடி; என் சிறகுக்கு இல்லை எல்லையடி" என்று பாடுகையில் அவருள் கிளர்ந்தெழும் சுதந்திர வேட்கையை நன்கு உணர முடியும். இந்த வேட்கைதான் இறுக்கமான சமூக சூழலின் தடைகளை உடைத்துக் கொண்டு, இந்த இசைப் பயணத்திற்கான மன உறுதியை அவருக்கு வழங்கியிருக்கிறது.
இதுதான் லறீனாவின் முதல் இசை அல்பம் என்றாலும், அவர் திடீரெனத் தோன்றிய பாடகியல்ல. நிச்சயம் அவருள் ஒரு குழந்தைப் பாடகி இருந்திருக்கக் கூடும். பள்ளி நாட்களின் பாடகியாகவும் அவர் இருந்திருப்பார் என்பதற்கான அடையாளத்தை, "ஒரு காலம்.. அந்தக் காலம் பொற்காலம்; நம் பள்ளி நாட்களை நினைக்கின்றேன்" என்ற பாடல் மூலம் உணர முடியும்.
எல்லோராலும் மறக்க இயலாத பள்ளி நாட்களின் பரவசம், நல்ல ஆசிரியர்களின் முன்மாதிரி -அர்ப்பணிப்பு குறித்துப் பாடி, ஏறி வந்த ஏணிகளை நன்றியோடு நினைக்கும் பரந்த மனசு லறீனாவுக்கு வாய்த்திருக்கிறது. தன்னை வளர்த்து ஆளாக்கிய மாத்தளை ஆமினா மகளிர் கல்லூரியின் இனிய நினைவுகளுக்கு, இந்த இசை முயற்சியை அவர் சமர்ப்பணம் செய்திருப்பதற்கு இதுவே பின்னணியாய் இருக்கலாம்.
லறீனாவின் எழுத்துகளைப் போலவே, இந்தப் பாடல்களிலும் சமூக மாற்றம் பற்றிய பிரக்ஞையும் நம்பிக்கையும் சுடர் விடுகின்றன. "ஒளி எங்கே? ஒளி எங்கே?" என்ற இடையறாத கேள்விகளோடு ஒரு பாடல் தொடங்கி, "சமூகத்தின் அவலங்கள் கண்டு நீ கொதித்தெழும் தருணம் எது?" என்று தொடர்கிறது. "எழுந்திடு நீ, துணிந்திடு நீ, செயல்படு நீ" என்று எம்மை நோக்கி அழைக்கும் அழைப்பாளரின் குரலையும் இதில் கேட்கிறோம்.லறீனாவின் ஆழ்மனத்தின் குரல் இது.
"சமூகத்தின் அவலங்கள் கண்டு நீ விழித்தெழும் தருணம் எது?" என்ற கேள்வி மூலம் நமது உறக்கத்தைக் கலைக்கிறார். சமூக அவலங்களை மாற்றும் உந்துதல் அவருள் கிளர்கிறது. இதுதான் லறீனா. எழுத்துகளினூடே நாம் கண்ட அதே லறீனாவின் இன்னொரு பரிமாணம் இது.
"வையமீதிலே மானிட ஓலம். ஓயுமோ இனியேனும் போர்க்கோலம்?" என்று கேட்கிறபோது அவருள் மானிடம் விகசிக்கிறது. இந்த பாடலைப் பாடுகையில் அவரது குரலில் மெலிதாக சோகம் இழையோடுகிறது. போரின் அவலம் குறித்த தீராப் பெருங் கவலையை இந்தப் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.
"அன்னை மடியில் இருக்கையிலே..." என்ற பாடல் குழந்தையின் குரலில் இளகிய தொனியில் நகர்ந்து செல்கிறது. "வாழ்க்கை முழுதும் நிழலாய் இருந்தாய்; வலி தனைக் காட்டும் ஒளியாய்த் திகழ்ந்தாய்" என்று தாயின் உன்னதத்தை வார்த்தைகளுக்குள் வசப்படுத்துகிறார்.
" மண்ணிலே...நாம் வாழும் மண்ணிலே..." என்ற பாடலில், அடையாளம் தொலைத்து முகவரி இழந்த பெருந்துயரையும், போரின் காரணமாய் அகதியாய் அலையும் பேரவலத்தையும் பாடி, "இறைவா! இறைவா!! விடியல் வருமா?" என்ற கேள்வியை எழுப்புகிறார்.
சமூகத்தின் கையறு நிலையை, இலக்கின்றிய பயணம் குறித்த ஆதங்கத்தை, " கானல் நீரை நம்பினோம்" என்று பாடும் அவர், "நாளை விடியல் வரும்" என்ற நம்பிக்கையின் ஒளிக்கீற்றை இன்னொரு பாடலில் சுமந்து வருகிறார்.ஒரே நேரத்தில் கேள்வியாயும் பதிலாயும் அமையும் இந்தப் பாடல்களின் உள்ளார்ந்த பொருத்தப்பாடு அலாதியானது.
"பொறு மகளே.. பொறு மகளே" யில் "நாளை நல்ல முடிவு வரும்" என்று நம்பிக்கையூட்டும் லறீனாவின் வரிகளிலும் குரலிலும், தாய்மையின் பரிவும் பாசமும் விகசிக்கிறது.
மொத்தத்தில் லறீனாவின் சுயம், மானிடம் நேயம், உள்ளார்ந்த அறம், சமூக அவலம் குறித்த விசனம், அன்பின் விகசிப்பு, விடுதலை வேட்கை, சமூக மாற்றத்திற்கான தேடல் - எல்லாமே ஒருங்கிணைந்து, 'சுயமி' மூலம் பாடல்களாய் இசை வடிவமெடுத்திருக்கின்றன எனலாம்.
இந்த முயற்சியில் இசை சார்ந்த சில குறைபாடுகள் ஆங்காங்கே எனது மேலோட்டமான பார்வைக்குத் தெரிகின்றன. அது குறித்து பேசுமளவுக்கு எனது இசைஞானம் போதாது.
இந்த இசைப்பாடல்களுக்குப் பின்னே கடும் உழைப்பும் தொடர்ந்த முயற்சியும் இருப்பதை உணர முடிகிறது. ஒரு பெண்ணாக, தாயாக இருந்து கொண்டு லறீனா இதைச் சாதித்திருக்கிறார் என்பது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் பின்னே உள்ள உழைப்பின் பெறுமதியை மேலும் அர்த்தபூர்வமாக்கும் பெறுமானச் சேர்க்கை இது.
கனதி மிக்க இந்த முயற்சியில் பெண் மொழியின் கூறுகளை அடையாளம் காணலாம். லறீனாவுக்கு நிறைந்த வாழ்த்துக்கள். அவர் இன்னும் சாதிப்பார் என்பதற்கான அடையாளமே இது. அவரை ஓய்வெடுக்க விடாமல் துரத்தும் உள்ளொளிக்கு ஒரு கூடுதல் வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும்.
பிற்குறிப்பு: லறீனாவுக்கு 'கொடகே விருது' கிடைத்தவுடன் எழுத நினைத்த பதிவு இது. பல்வேறு காரணிகளால் தாமதமாகி விட்டது.