நாமல் சிறை செல்வார்



இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ மீது காவல்துறையின் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ 15 கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தைக் கொடுத்து நிறுவனம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டை விசாரணை செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது கறுப்புப் பண மோசடிக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
இதனையடுத்து, நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றின் 4 வங்கிக் கணக்குகளை முடக்குமாறு உத்தரவிட்டுள்ள கொழும்பு மேலதிக மாஜிஸ்ட்ரேட் நிஷாந்த பீரீஸ், நாமல் ராஜபக்ஷ தவிர்ந்த அவரது நிறுவனத்துடன் தொடர்புடைய 7 பேரை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பற்றி நாமல் ராஜபக்ஷவிடம் பிபிசி வினவியது.
'கடந்த ஆண்டு ஜனவரி 8-ம் திகதியிலிருந்து எங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. துவங்கும் போது 18 பில்லியன் டொலர் அளவுக்கு குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால் இன்று சில மில்லியன் ரூபாய்கள் அளவுக்கு குற்றச்சாட்டை சுருக்கிக்கொண்டுள்ளார்கள்' என்றார் நாமல் ராஜபக்ஷ.
'கவர்ஸ் லிமிட்டட் என்ற நிறுவனத்தில் நீங்கள் உரிமையாளர் என்றும், 15 கோடி ரூபாய் செலவிட்டு இன்னொரு நிறுவனத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினரான உங்களிடம் எப்படி இந்தளவு பணம் வந்தது என்று நாமல் ராஜபக்ஷவிடம் கேட்டபோது
'நான் 2010-ம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும்போது தேர்தல் ஆணையாளருக்கும், தெரிவான பின்னர் நாடாளுமன்ற சபாநாயகருக்கும் எனது சட்டபூர்வமான சொத்து விபரங்களை நாடாளுமன்றத்திடம் முன்வைத்து வந்துள்ளேன்' என்றார் நாமல் ராஜபக்ஷ.
'23 வயதில் நான் நாடாளுமன்றத்துக்கு தெரிவானேன். எனது இளமைக்காலத்தில் எனது உறவினர்களிடமிருந்தும் பெற்றோர், குடும்பத்தினரிடமிருந்தும் எனக்குக் கிடைத்த சொத்துக்களின் விபரங்களை உரிய காலத்தில் சபாநாயகரிடம் சமர்ப்பித்திருக்கிறேன். நாங்கள் திருடர்கள் என்று உலகத்துக்கு காட்ட வேண்டும் என்பது தான் இந்த அரசாங்கத்தின் தேவை' என்றார் நாமல்.
'மக்களின் பிரச்சனைகளை மற்றக்கடிப்பதற்காக, எங்களின் மீது வழக்குப்போட்டு, ஓரிரு மாதங்கள் சிறையில் அடைக்கப்பார்க்கிறார்கள். பொருள் விலை அதிகரிப்பை மறைப்பதற்காக, நாமல் ராஜபக்ஷ மீது வழக்கு போட்டுள்ளார்கள்' என்றும் கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ.
மகிந்த ராஜபக்ஷவின் இன்னொரு மகனான கடற்படை அதிகாரியாக நியமனம் பெற்றிருந்த யோஷித்த ராஜபக்ஷவும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.