சவூதி அரேபியாவுக்குப் பணிப் பெண்ணாகச் சென்ற இளம் தாய் ஒருவர் எட்டு வருடங்களின் பின்னர் சடலமாக கொண்டுவரப்பட்ட சோகமயமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீலாக்கேணி எனும் கிராமத்தைச்சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயான மாணிக்கராஜா காளிஸ்வரி என்ற 37 வயது பெண்ணின் சடலமே இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தனது குடும்ப கஷ்டம் காரணமாக உள்ளூரைச் சேர்ந்த வெளிநாட்டுக்கு பணிப்பெண்களை அனுப்பி வைக்கும் முகவர் ஒருவருடைய உதவியுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக இவர் சென்றுள்ளார்.
சவூதிக்குப்போன காளிஸ்வரி தனது பிள்ளைகளுக்கு இரண்டு மாதங்கள் மாத்திரமே 19.500 ரூபா வீதம் பணம் அனுப்பிவைத்துள்ளார்.அதன்பின் அவரிடமிருந்து எந்த தகவலும் வராத நிலையில் அவருடைய கணவர் மற்றும் பெண்ணின் சகோதரர் நல்லூரிலுள்ள உள்ளூர் முகவரிடம் சென்று விசாரித்தபோது மேற்படி முகவர் அப்பெண் வெளிநாட்டுக்குச் சென்ற ஆவணங்களை அவர்களிடம் கையளித்துள்ளார்.
கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக காளிஸ்வரிக்கு என்ன நடந்தது என்று அறியமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த குடும்பத்தினருக்கு கடந்த 7 ஆம் திகதி நல்லூர் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவரிடமிருந்து செய்தியொன்று வந்திருக்கிறது.
நீலாக்கேணியைச் சேர்ந்த ஒருவருடைய பிரேதப் பெட்டி கொழும்புக்கு வந்திருக்கிறதென புலனாய்வுத்துறையைச்சேர்ந்த ஒருவர் தமக்குத் தெரிவித்ததாக கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் அவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து காளிஸ்வரியின் குடும்பத்தினர் இச்செய்தி பற்றி யாரிடம் விசாரிப்பது எனத் தெரியாத நிலையில் பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக தெரியவருகிறது.

