தாஜுதீன் கொலை: காவல்துறை அதிகாரி கைது



இலங்கையில் 2012-ம் ஆண்டில் மர்மமான முறையில் உயிரிழந்த ரக்பி வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் தொடர்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்தபோது, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணை நடத்திவருவதாகவும், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ருவான் குணசேகர தெரிவித்தார்.
'தாஜுதீனின் கொலை' தொடர்பான விசாரணையின் தகவல்களை மூடி மறைத்து விசாரணைகளை முடக்கியதாக அந்த பொலிஸ் அதிகாரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட வாசிம் தாஜுதீன், ராஜபக்ஷவின் புதல்வர்களுடன் நெருக்கமாக இருந்தவர் என்று நாமல் ராஜபக்ஷ முன்னர் பிபிசியிடம் கூறியிருந்தார்.
ஆனால், தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் புதிய அரசாங்கத்திடம் முறையிட்டதை அடுத்து, அந்த மரணம் பற்றி மீண்டும் விசாரணைகள் துவங்கப்பட்டன.
தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் கடந்த மாதம் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.