ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற ரீதியில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் உறுதியுடன் செயற்பட வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைவாழ் இந்துக்களினதும், சிங்கள பௌத்தர்களினதும் மிக முக்கியமான தேசிய கலாசார விழாவாகவே சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.
புத்தாண்டானது, அர்ப்பணிப்பு, பாராட்டுதல், பகைமை மறத்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல், பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொள்ளுதல் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வடிவமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சித்திரைப் புத்தாண்டில் இந்த நற்குணங்களை செயலில் காட்டி அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து, கலாசார உரிமைகளை பேணிப் பாதுகாத்தவாறு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பேதங்களும் பாகுபாடுகளும் இல்லாத, போதைப்பொருள் மற்றும் மதுபானப் பவனையற்ற, ஒரு தேசத்தை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை நல்கும் வகையில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாட உறுதி கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி தமது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கட்டியெழுப்பும் எதிர்கால வேலைத்திட்டத்தோடு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட இப்புத்தாண்டில் உறுதிபூணுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பெற்றுக்கொண்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கட்டியெழுப்பவும் இந்நன்நாளில் ஒன்றிணைந்து செயற்பட உறுதி பூணுவோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
அனைத்து இலங்கையருக்கும் சமாதானம், மகிழ்ச்சி, சுபீட்சம் மிக்கதாக இப்புத்தாண்டு அமையட்டும் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்களின் நிமித்தம் சிதைந்து போயுள்ள தமிழ், சிங்கள சமூகங்களிடையேயான நல்லுறவைக் கட்டியெழுப்ப அனைவரும் முன் வரவேண்டும் என தமது சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டானது வெறுமனே ஒரு பண்டிகையென்று அல்லாமல் எமது கலை, கலாசாரம், பாரம்பரிய விளையாட்டுகள் என பல்வேறு அம்சங்களோடு பின்னிப்பிணைந்த பல நூற்றாண்டு மேன்மையான வரலாற்றுக்கு சான்றாக இருப்பது சிறப்பம்சமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமக்கே உரித்தான எமது பாரம்பரியங்களுடன், தனித்துவமான சமூகங்களாக சித்திரைப்புத்தாண்டைக் கொண்டாடும் நாம், இதனை தமிழ், சிங்கள மக்களை இணைக்கும் பண்டிகையாக மாத்திரமின்றி இரு சமூகங்களும் கொண்டாடும் பண்டிகை என்பதைப் பெருமையுடன் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு சூழ்நிலைகளின் நிமித்தம் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலையிலுள்ள எமது உறவுகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

