பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்த பொடி சாகர என்று அழைக்கப்பட்ட சுமித் தயாரத்ன, இப்பாகமுவ – கும்புக்கெட்ட பிரதேசத்தில் வைத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரைக் கைது செய்வதற்கு பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நேற்றிரவு 11 மணியளவில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.
இந்த வீடு சந்தேக நபர் தகாத உறவு வைத்திருந்த பெண் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது.
வீட்டை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த போது தப்பியோட முயற்சித்த சந்தேக நபர் துப்பாக்கியொன்றினால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கட்டுநாயக்க, மாதுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதான சுமித் தயாரத்ன எனப்படும் பொடி சாகரவிற்கு எதிராக 6 ஆட் கொலை சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இவர் பணத்திற்காக ஆட்கொலையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதி கம்பஹா சிறைச்சாலை பஸ் ஒன்றின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, மூன்று சிறைச்சாலை அதிகாரிகளையும் கைதி ஒருவரையும் கொலை செய்த சம்பவத்திலும் சுமித் தயாரத்ன பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.(News First)

