விடுதலைப் புலிகள் அமைப்பில், முன்னர் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக இருந்த ராம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் நேற்று கடத்தப்பட்டதாக முன்னர் செய்தி வெளியானது.
ஆனால் அவரிடமிருந்து வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று கூறியுள்ளனர்.
ஞாயிறன்று காலை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டுக்கு நீல நிற ஜீப் வண்டியில் வந்த அடையாளம் தெரியாத சிலர் அவரைக் கடத்திச் சென்றதாக, அவரது மனைவி காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவராக இருந்த அவர், இறுதியாக அம்பாறை மாவட்டத் தளபதியாக இருந்தார்.
இலங்கை அரசால் கிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்ட பின்னர், சில காலம் தலைமறைவாகியிந்த அவர் திருகோணமலை மாவட்டத்திலுள்ள காட்டுப் பகுதியில் வைத்து 2009ம் ஆண்டு இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இராணுவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, புனர்வாழ்வு பெற்று 2013 இல் விடுதலை செய்யப்பட்டார்.

