இலங்கையின் மலையகத் தொழிலாளர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகாவிட்டால் இம்மாதம் 25ஆம் தேதி அங்கு அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள்
நீண்ட நாட்களாக இழுபட்டுக் கொண்டிருக்கும் ஊதிய உயர்வை மையப்படுத்தியே மலையகப் பகுதியில் இம்முறை தொழிலாளர் தினக் கூட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றுள்ளன என அங்கிருக்கும் செய்தியாளர் கூறுகிறார்.
இப்பிரச்சனை தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் தலைமைகள் மீதும் தொழிலாளர்கள் அதிருப்தி கொண்டிருந்தாலும், மேதினக் கூட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு கிடைக்கும் 620 ரூபாய் சம்பளம்1000 அளவுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாகவே தொழிலாளர்களும், அரசியல் கட்சிகளும் கோரி வருகின்றன.
ஆனால் முதலாளிமார் சம்மேளம் அதற்கு இன்றுவரை உடன்படவில்லை.
எனவே இனியும் காத்திருக்க முடியாது எனக் கூறும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இம்மாதம் 24ஆம் தேதிக்கு முன்னர் ஊதிய உயர்வு குறித்த முடிவு தெரியாவிட்டால், 25ஆம் தேதி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபவர் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் மலையகத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு பெற்றுத்தர தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
எனினும் தொழிற்சங்கங்கள் தம்மை ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என பல தேயிலைத் தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் கூறி வருந்துகின்றனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒராண்டும் நிலையிலும் மலையக மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

