இரத்தினபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவின்போது அதற்குள் சிக்குண்டதாக கருதப்படும் தேரர் ஒருவரைத் தேடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இன்றுடன் கைவிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பம்பாஹின்ன பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மண்சரிவின் போது அப்பகுதியில் அமையப் பெற்றிருந்த ஆரண்ய சேனாசனம் ஒன்றும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
இங்கு தவ வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த பாணந்துறை அனோமதஸ்ஸி தேரர் மண்சரிவின் பின்னர் காணாமல் போயிருந்தார்.
மண்சரிவிற்குள் அவர் உயிருடன் புதைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரைத் தேடும் பணிகள் இன்று வரை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும் தொடரும் மழைவீழ்ச்சி காரணமாக மண்தோண்டப்பட்ட பகுதிகளில் நீர் நிரம்புதல் மற்றும் இன்னுமொரு மண்சரிவிற்கான அபாயம் ஏற்பட்டுள்ளமை என்பன காரணமாக தேரரை தேடும் முயற்சியைக் கைவிட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது.

